கேரள செவிலியர் வழக்கு: கொலை செய்யப்பட்டவரின் சகோதரர் பரபரப்பு தகவல்கள்
ஏமன் நாட்டில், கேரளாவைச் சேர்ந்த செவிலியர் ஒருவருக்கு நாளை மரண தண்டனை நிறைவேற்றப்பட இருந்த நிலையில், அவரது தண்டனை தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், கொலை செய்யப்பட்டவரின் சகோதரர் கூறியுள்ள சில விடயங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
கேரள செவிலியர் வழக்கு
இந்தியாவின் கேரள மாநிலத்தைச் சேர்ந்த நிமிஷா பிரியா (34), 2008ஆம் ஆண்டு, ஏமன் நாட்டில் செவியர் வேலைக்கு சேர்ந்தார்.
2015ஆம் ஆண்டு ஏமன் நாட்டவரான மஹ்தி (Talal Abdo Madhi) என்பவருடன் இணைந்து கிளினிக் ஒன்றைத் துவக்கினார் நிமிஷா.
2017ஆம் ஆண்டு, தண்ணீர்த் தொட்டி ஒன்றிற்குள், துண்டாக்கப்பட்ட மஹ்தியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. அவரைக் கொலை செய்ததாக நிமிஷா கைது செய்யப்பட்டார்.
மஹ்தி தனது பாஸ்போர்ட்டைப் பறித்துவைத்துக்கொண்டு தன்னைத் துன்புறுத்தியதாகவும், அவரிடமிருந்து தனது பாஸ்ப்போர்ட்டை மீட்பதற்காக மஹ்திக்கு மயக்க ஊசி போட்டதாகவும், மயக்க மருந்தின் அளவு அதிகமானதால் மஹ்தி உயிரிழந்துவிட்டதாகவும் நிமிஷா தரப்பில் கூறப்பட்டது.
நிமிஷாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இன்று அவருக்கு தண்டனை நிறைவேற்றப்பட இருந்த நிலையில், தற்போது, இந்திய அரசு மற்றும் செல்வாக்கு மிக்க இஸ்லாம் மதத் தலைவர் ஒருவரது முயற்சியால் நிமிஷாவின் தண்டனை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சகோதரர் பரபரப்பு தகவல்கள்
இந்நிலையில், கொலை செய்யப்பட்ட மஹ்தியின் சகோதரர் கூறியுள்ள சில விடயங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
கொலை செய்யப்பட்ட மஹ்தியின் சகோதரரான அப்தெல் (Abdel Fattah Mahdi), தன் சகோதரர் மஹ்தி, நிமிஷாவின் நிமிஷாவை கொடுமைப்படுத்தியதாகவும், அவரது பாஸ்போர்ட்டை பறித்துக் கொண்டதாகவும் கூறப்படுவது உண்மையில்லை என்று கூறியுள்ளார்.
அப்படி நிமிஷா கூட கூறவில்லை. அவரது சட்டத்தரணிதான் அப்படி கூறுகிறார் என்கிறார் அப்தெல்.
மஹ்தியும் நிமிஷாவும் இணைந்து ஒரு கிளினிக் துவங்கியபின், இருவரும் திருமணம் செய்துகொண்டதாகவும், 3 முதல் 4 ஆண்டுகள் வரை இருவரும் திருமண உறவில் இருந்ததாகவும் அப்தெல் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கில், கொலையாளியை பாதிக்கப்பட்டவராக சித்தரித்து, ஒரு குற்றத்தை நியாயப்படுத்த முயற்சி மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த வழக்கில் சமரசம் குறித்த கேள்விக்கு, அதாவது, நிமிஷா பிரியாவை மன்னிப்பது குறித்து பேசிய அப்தெல், அவரை மன்னிப்பதற்கான முயற்சிகள் குறித்த எங்கள் கருத்து மிகவும் தெளிவாக உள்ளது.
இந்த வழக்கில் 'கடவுளின் சட்டம்' செயல்படுத்தப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். அதை விடக் குறைவான எதையும் நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று கூறியுள்ளார்.
இன்னொரு முக்கிய விடயம் என்னவென்றால், நிமிஷாவின் மரண தண்டனை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அது ரத்து செய்யப்படவில்லை.
கொலை செய்யப்பட்ட மஹ்தியின் குடும்பத்தினர் நிமிஷாவை மன்னித்தால் மட்டுமே அவரது மரண தண்டனை ரத்து செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |