ஒரே இடத்தில் புதைக்கப்பட்ட 100க்கும் அதிகமான சடலங்கள்! இது கொரோனா மரணம் அல்ல.. அதிர்வலையை கிளப்பிய சம்பவம்
சியரா லியோனில் பெட்ரோல் லொறி வெடித்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த 100க்கும் அதிகமானோரின் சடலங்கள் ஒரே இடத்தில் அருகருகே புதைக்கப்பட்டன.
மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோன் தலைநகா் ஃப்ரீடௌனின் புகா்ப் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு சென்றுகொண்டிருந்த பெட்ரோல் லொறியுடன் பேருந்து மோதி விபத்துக்குள்ளானது.
அதையடுத்து, லொறியில் இருந்து கசிந்த பெட்ரோலை சேகரிப்பதற்காக அந்தப் பகுதியில் ஏராளமானவா்கள் கூடினா். அப்போது திடீரென லாரியில் தீப்பிடித்து வெடித்துச் சிதறியது.
இந்த கோர சம்பவத்தில் 100க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களுக்கு நாட்டில் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் சவப்பெட்டியில் வைக்கப்பட்டு ஒரே இடத்தில் நேற்று புதைக்கப்பட்டது. மயானத்தில், உறவினர்கள் மற்றும் தொழிலாளர்கள் உடல்களை அடக்கம் செய்ய பாதுகாப்பு உடைகள் அணிந்திருந்தனர். பலரும் அங்கு கதறி அழுவதை காண முடிந்தது.
டஜன் கணக்கான சவப்பெட்டிகளில் சியரா லியோனின் கொடியுடன் Rest in Peace (அமைதியில் ஓய்வெடுங்கள்) என்ற வாசகங்களும் எழுதப்பட்டிருந்தன.
இதனிடையில், இது குறித்து நாட்டின் ஜனாதிபதி ஜூலியஸ் பயோ கூறுகையில், இந்த சம்பவத்தில் என்ன நடந்தது என்பது குறித்து விசாரிக்கப்படும்.
இது போன்ற பேரழிவுகள் மீண்டும் நிகழாமல் தடுக்க நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.