நான் அரசு பள்ளியில் படித்த ஆவரேஜ் மாணவன்.. விஞ்ஞானி வீரமுத்துவேல் பேசும் வீடியோ வைரல்
தமிழகத்தைச் சேர்ந்த சந்திரயான்-3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேலை உலகமே பெருமிதத்துடன் கொண்டாடி வரும் வேளையில், அவர் பேசிய வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.
வீரமுத்துவேல் பேசியது
இஸ்ரோ விஞ்ஞானி வீரமுத்துவேல் பேசிய வீடியோவில்,"எல்லோருக்கும் வணக்கம். என் பெயர் வீரமுத்துவேல். இந்த வாய்ப்பு கொடுத்த மயில்சாமி அண்ணாதுரை சாருக்கு நன்றி. தற்போது பெங்களூரு இஸ்ரோவில் சயின்டிஸ்ட் இன்ஜினியராகப் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்.
நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் விழுப்புரம். பள்ளிப்படிப்பை அரசு பள்ளியில் பயின்றேன். நான் ஒரு ஆவரேஜ் மாணவன் தான். அடுத்து என்ன படிக்க வேண்டும் என்று எந்த ஒரு ஐடியாவும் இல்லை. பெற்றோர் தரப்பிலும் கல்வியில் பெரிய பின்புலம் இல்லை. நண்பர்களோடு சேர்ந்து டிப்ளமோ இன் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் (DME) படிப்பில் சேர்ந்தேன்.
படிக்கும் போது எனக்கு இன்ஜினியரிங் மேல இன்ட்ரெஸ்ட் வந்தது. அதனால், 90 சதவீதம் மார்க் எடுக்க முடிந்தது. மெரிட்டில் ஸ்ரீ சாய்ராம் இன்ஜினியரிங் கல்லூரியில் பிஇ (BE) பட்டப்படிப்பில் சேர்ந்தேன். எல்லா செமஸ்டரிலும் முதல் அல்லது இரண்டாவது இடத்தில் வருவேன்.
அதற்கு நான் எல்லா நேரத்திலும் படிக்க மாட்டேன். படிக்கும் போதே 100 சதவீதம் புரிந்து படிப்பேன். அதுவே எனக்கு நல்ல சதவீதத்தை கொடுத்தது. பின்பு, ஆர்இசி திருச்சி கல்லூரியில் எம்இ (ME) படித்தேன். அங்கும் முதல் அல்லது இரண்டாவது இடத்தில் வருவேன். 9.17 சிஜிபியுடன் முதுநிலை படிப்பை முடித்தேன்.
கேம்பஸ் மூலமாக கோவை லக்ஷ்மி மெஷின் ஒர்க்ஸ் (Lakshmi Machine Works) நிறுவனத்தில் சீனியர் இன்ஜினியராகப் பணியில் சேர்ந்தேன். வேலை செய்து கொண்டிருக்கும் போதே ஏரோஸ்பேஸ் ரிசேர்ச் (Aerospace Research) மீது எனக்கு இன்ட்ரெஸ்ட் இருந்தது.
அப்போதுதான் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் இன்ஸ்டிட்யூட் (BENGALURU HINDUSTAN AERONAUTICS INSTITUTE) பெங்களூருவில் ஹெலிகாப்டர் டிவிஷன்-ன்னு ரோட்டரி விங் டிசைன் அண்ட் ரிசேர்ச் சென்டரில் டிசைன் விங் (Rotary Wing Research and Design Center) இன்ஜினியராக பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது.
அப்போ தான் எனக்கு எனது கனவான இஸ்ரோவில் ( ISRO) பணி புரியும் வாய்ப்பு கிடைத்தது. முதலில் ப்ராஜக்ட் இன்ஜினியர் (Project engineer), ப்ராஜக்ட் மேனேஜராக (Project manager), மார்ஸ் ஆர்பிட்டர் மிஷன் (mars orbiter mission) உள்பட நிறைய ரிமோட் சென்ஸிங் அண்ட் சயின்டிஃபிக் சாட்டிலைட் மிஷன்களில் (remote sensing scientific satellite mission ) வேலை செய்தேன். அதன்பிறகும், என் ஆராய்ச்சியை விடாமல் ஐஐடியில் (IIT) பிஎச்டி ஆராய்ச்சிப் படிப்பில் இணைந்தேன்.
அப்போது, என் ஆராய்ச்சிக் கட்டுரைகள் சர்வதேச புகழ்பெற்ற இதழ்களில் வெளிவந்தன. பல சர்வதேச அறிவியல் அரங்குகளில் பேப்பர் பிரசன்டேஷன் செய்திருக்கிறேன்.
பின்னர், வெற்றிகரமாக முனைவர் பட்டம் பெற்றேன். இஸ்ரோவின் முதல் நானோ சாட்டிலைட் குழுவை வழிநடத்தும் வாய்ப்பு கிடைத்தது. அதன்பின்னர் மூன்று நானோ சாட்டிலைட்டுகளை ஏவியுள்ளோம்.
அசோசியேட் ப்ராஜக்ட் டைரக்டராக சந்திரயான்-2 திட்டத்தில் இருந்தேன். சந்திரயான்-3 திட்டத்தில் எனக்கு திட்ட இயக்குநர் பதவிக்கான வாய்ப்பு கிடைத்தது . இது இஸ்ரோவுக்கு மிகப்பெரிய மிஷன்.
நான் ஒரு எளிமையான மனிதர். என்னால் முடியும் என்றால் எல்லோராலும் முடியும். அதை நான் எப்படி பயன்படுத்துகிறோம் என்பதில் தான் இருக்கிறது.
சுய ஒழுக்கம், 100 சதவீதம் ஈடுபாடு, எதிர்பார்ப்புகளற்ற ஈடுபாடு, கடின உழைப்பு மற்றும் தனித்துவம் ஆகியவை நிச்சயம் வெற்றியை தரும். அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். நன்றி" எனக் கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |