நிலச்சரிவு, இடைவிடாத பேய் மழை... பெருவெள்ளத்தில் மூழ்கும் ஒரு ஆசிய நாடு
தொடர்ச்சியான மழை, பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 90 பேர்கள் மரணமடைந்துள்ளதாக வியட்நாம் சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
டக் லக் மாகாணத்தில்
அக்டோபர் மாத இறுதியில் இருந்து தெற்கு-மத்திய வியட்நாமில் இடைவிடாத மழை பெய்து வருகிறது. மட்டுமின்றி, பிரபலமான விடுமுறை இடங்கள் பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.

கடந்த வாரத்தில் மத்திய வியட்நாமின் சில பகுதிகளில் மழைப்பொழிவு 1,900 மிமீ அளவைத் தாண்டியுள்ளது. இந்தப் பகுதி ஒரு முக்கிய காபி உற்பத்திப் பகுதியாகவும், பிரபலமான கடற்கரைகளின் தாயகமாகவும் உள்ளது,
ஆனால் புயல் மற்றும் வெள்ள ஆபாயங்களுக்கும் ஆளாகி வருகிறது. நவம்பர் 16 முதல் ஏற்பட்ட இறப்புகளில் 60க்கும் மேற்பட்டவை மலைப்பாங்கான மத்திய டக் லக் மாகாணத்தில் பதிவாகியுள்ளன.
இப்பகுதியில், பல்லாயிரக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியதாக அமைச்சகம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. கடந்த வாரம், மத்திய கியா லாய் மற்றும் டக் லக் மாகாணங்களில் படகுகளைப் பயன்படுத்தி மீட்புப் பணியாளர்கள் ஜன்னல்களைத் திறந்தும் கூரைகளை உடைத்தும் பெருவெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் குடியிருப்பாளர்களுக்கு உதவினர்.

மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றவும் வெளியேற்றவும் இராணுவம், காவல்துறை மற்றும் பிற பாதுகாப்புப் படைகள் களமிறக்கப்பட்டுள்ளன. பின் தின் மாகாணத்தில் உள்ள கடலோர நகரமான குய் நோனில் வெள்ளத்தில் மூழ்கிய மருத்துவமனைகளுக்கு மீட்புப் பணியாளர்கள் உணவு மற்றும் தண்ணீரைக் கொண்டு சேர்த்துள்ளனர்.
80,000 ஹெக்டேர் பயிர்கள்
வியாழக்கிழமை அதிகாலை இரண்டு இடங்களில் டக் லக் மாகாணத்தில் உள்ள பா நதியின் நீர்மட்டம் 1993 ஆம் ஆண்டின் சாதனையை முறியடித்தது. அதே நேரத்தில் கான் ஹோவா மாகாணத்தில் உள்ள காய் நதியும் புதிய உச்சத்தை எட்டியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
235,000க்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின, கிட்டத்தட்ட 80,000 ஹெக்டேர் பயிர்கள் சேதமடைந்ததாக வியட்நாமின் பேரிடர் முகமை தெரிவித்துள்ளது.

பெருவெள்ளத்தால் இதுவரை வியட்நாம் பொருளாதாரத்திற்கு சுமார் 8.98 டிரில்லியன் டாங் ($341 மில்லியன்) இழப்பு ஏற்பட்டுள்ளதாக அரசாங்கம் மதிப்பிட்டுள்ளது.
முன்னதாக ஜனவரி முதல் அக்டோபர் வரையிலான காலகட்டத்தில், வியட்நாமில் ஏற்பட்ட கடுமையான வானிலை காரணமாக 279 பேர் மரணமடைந்துள்ளனர் அல்லது காணாமல் போயுள்ளனர், மேலும் 2 பில்லியன் டொலருக்கும் அதிகமான சேதத்தை ஏற்படுத்தியுள்ளதாக அரசாங்கம் தெரிவித்திருந்தது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |