விஜயகாந்த் உடல் தேமுதிக தலைமை அலுவலகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது
நடிகர் விஜயகாந்த் இன்று காலை காலமான நிலையில் அவரது உடல் சென்னை தேமுதிக தலைமை அலுவலகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது.
விஜயகாந்த் மறைவு
கடந்த சில நாட்களுக்கு முன்பாக உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்த் டிசம்பர் 11 -ம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதனையடுத்து, கட்சியின் பொதுக்குழு செயற்குழு கூட்டத்தில் வீல் சேரில் வந்த விஜயகாந்தை பார்த்து தொண்டர்களும், ரசிகர்களும் கண்ணீர் விட்டு அழுதனர்.
பின்னர், செவ்வாய்கிழமை இரவு விஜயகாந்த் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்படுவதாக கூறப்பட்டது.
இந்நிலையில் இன்று காலை "விஜயகாந்த் நுரையீரல் அழற்சி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று இருந்தார். மருத்துவ பணியாளர்களின் முயற்சி இருந்தபோதிலும் இன்று காலை காலமானார்’’ என மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியானது.
பொதுமக்கள் அஞ்சலிக்காக..
இதனையடுத்து, அவரது உடல் மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டது. அப்போது அவரது வீட்டின் முன்பு குவிந்திருந்த தொண்டர்கள் அவரது உடலை பார்த்து கதறி அழுதனர்.
அவரது வீட்டின் முன்பு உள்ள தேமுதிக கொடி அரை கம்பத்தில் பறக்கவிடப்பட்டது. இந்நிலையில், மறைந்த விஜயகாந்தின் உடல் சென்னை தேமுதிக தலைமை அலுவலகத்தில் பொதுமக்கள் மற்றும் அரசியல் தலைவர்களின் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |