விஜயகாந்தின் நிலை தான் விஜய்க்கும் ஏற்படும்.., காங்கிரஸ் தலைவர் விமர்சனம்
அரசியலை பொறுத்தவரை நடிகர் விஜயகாந்திற்கு ஏற்பட்ட நிலை தான் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்க்கு ஏற்படும் என்று காங்கிரஸ் தலைவர் கூறியுள்ளார்.
விஜய்க்கும் இந்த நிலைமை தான்
நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்னும் கட்சியை தொடங்கி அரசியல் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறார்.
அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் தமிழகத்தில் நெருங்கி வரும் சூழ்நிலையில் பிற கட்சிகளை போலவே விஜயும் தனது கட்சியை வலுப்படுத்துகிறார்.
இதற்காக சில தினங்களுக்கு முன்பாக தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடை மதுரையில் பிரம்மாண்டமாக நடத்தி முடித்தார். அங்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் திரண்டனர்.
அந்த விழாவில், திமுக மற்றும் பாஜகவை காட்டமாக விமர்சித்து விஜய் பேசிய நிலையில் பல்வேறு கட்சிகளும் தவெக தலைவர் குறித்து கண்டனங்களும், கருத்துக்களும் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை விஜய் குறித்து பேசிய போது, நடிகர் விஜயகாந்த் மற்றும் சிரஞ்சீவிக்கு ஏற்பட்ட நிலை தான் அவருக்கும் ஏற்படும் என்றார்.
அதோடு, "கட்சி ஆரம்பித்து 10 விழுக்காடு வாக்குகள் பெற்ற விஜயகாந்த் விருத்தாசலத்தில் எம்எல்ஏ ஆனார். ஆனால், அந்த கட்சி இப்போது எப்படி இருக்கிறது என்று நாம் பார்க்க வேண்டும். நல்ல சித்தாத்தம், நல்ல கருத்துகளை பேசினார்.
அதேபோல, சிரஞ்சீவி கட்சி நிகழ்ச்சியில் 20 லட்சம் பேர் கலந்து கொண்டதாக சொன்னார்கள். ஆனால், இப்போது அந்த கட்சியே கிடையாது" என்று விமர்சனம் செய்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |