உக்ரைன் முன்னாள் ஜனாதிபதிக்கு விஷம் கொடுக்கப்பட்டதாக எழுந்த புகாரின் பின்னணியிலும் ரஷ்யா: கவனம் ஈர்க்கும் செய்தி ஒன்று
ரஷ்யாவால் பாதிப்புக்குள்ளாகியுள்ளது உக்ரைனின் இந்நாள் ஜனாதிபதி மட்டுமல்ல, ஏற்கனவே முன்னாள் ஜனாதிபதி ஒருவரும் ரஷ்யாவால் பாதிக்கப்பட்டார் என்பது குறித்த ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
1991ஆம் ஆண்டு சோவியத் யூனியன் சிதைந்தபோது அதிலிருந்து பிரிந்து தனி நாடாகியது உக்ரைன். அதற்கு முன் வரை உக்ரைன் சோவியத் யூனியனின் கட்டுப்பாட்டில்தான் இருந்தது.
2004ஆம் ஆண்டு உக்ரைனில் ஜனாதிபதி தேர்தல் நடந்தபோது, Viktor Yushchenko என்பவரும், Viktor Yanukovych என்பவரும் தேர்தலில் போட்டியிட்டனர். அப்போதே Yanukovychக்கு ரஷ்ய ஆதரவு இருப்பதாக கூறப்பட்டது. தேர்தலில் அவர் வெற்றி பெற, ரஷ்ய தலையீட்டை எதிர்த்து மக்கள் போராட்டங்களில் இறங்கினர்.
பின்னர் மீண்டும் தேர்தல் நடத்தப்பட்ட நிலையில், 52 சதவிகித வாக்குகள் பெற்று Yushchenko வெற்றி பெற்றார்.
இந்நிலையில், 2004ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் அவர் கடுமையாக உடல் நலம் பாதிக்கப்பட்டார். மருத்துவப் பரிசோதனையில், அவருடைய இரத்தத்தில், ஏஜண்ட் ஆரஞ்சு என்னும் களைகொல்லியில் பயன்படுத்தப்படும் டையாக்ஸின் எனும் ரசாயனம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும், சாதாரணமாக ஒருவர் உடலில் இருப்பதை விட 1,000 மடங்கு அதிகம் அந்த ரசாயனம் அவரது உடலில் இருந்தது. ஆகவே, ஜனாதிபதி Yushchenkoக்கு விஷம் கொடுக்கப்பட்டிருக்கலாம் என்ற முடிவுக்கு மருத்துவர்கள் வந்தனர்.
இது என்னைக் கொல்வதற்காக எனது அரசியல் எதிரிகள் மேற்கொண்ட நடவடிக்கை என Yushchenko தெரிவித்திருந்தார்.
இன்றுவரை Yushchenkoவுக்கு விஷம் கொடுத்தது யார், எப்படி அவருக்கு விஷம் கொடுக்கப்பட்டது என்பது கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால், அவர் உடல் நலம் பாதிக்கப்படுவதற்கு முன் விருந்தொன்றில் கலந்துகொண்டதை பலரும் சுட்டிக் காட்டினார்கள்.
அந்த விருந்தில் ரஷ்ய அதிகாரிகளுடன் தொடர்புடைய உக்ரைன் அதிகாரிகள் சிலர் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.