இருட்டு அறையில் சிறைவைக்கப்பட்ட 300 உக்ரைனியர்கள்: வெளிச்சத்துக்கு வந்த ரஷ்யாவின் கொடூரம்
உக்ரைனில் பள்ளி ஒன்றின் அடித்தளத்தில் 300 அப்பாவி உக்ரைனியர்களை ரஷ்ய துருப்புகள் சிறைவைத்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
குறித்த சம்பவத்தின் போது மரணமடைந்தவர்களின் பெயர்களை, பொதுமக்கள் சுவற்றில் எழுதி வைத்துள்ளதும் அம்பலமாகியுள்ளது.
சுமார் ஒருமாத காலம் ரஷ்ய துருப்புகளின் பிடியில் சிக்கியிருந்த 300 அப்பாவி மக்களில் 20 பேர்கள் மரணமடைந்துள்ளதாகவும், அவர்களின் சடலங்களும் அப்புறப்படுத்தாமல், அதே அறையில் காணப்பட்டதாகவும் தெரிய வந்துள்ளது.
700 சதுர அடி மட்டுமே கொண்ட அந்த அறையில் சிக்கிக்கொண்ட மக்களில் முதியவர்கள் பலர் சோர்வு, பசி அல்லது மூச்சுத் திணறலால் இறந்துள்ளனர். சுமார் 50 சிறார்களும் பச்சிளம் குழந்தைகளும் அந்த இருட்டு அறையில் ஒரு மாத காலம் சிறைவைக்கப்பட்டிருந்துள்ளனர்.
திடீரென்று கிராமத்திற்குள் புகுந்த ரஷ்ய துருப்புகள், தங்களை வலுக்கட்டாயமாக, அந்த பள்ளியின் அடித்தளத்திற்கு துப்பாக்கிமுனையில் கொண்டு சென்றுள்ளதாக தெரிவித்துள்ளார் 60 வயதான முதியவர் ஒருவர்.
சிறைவைக்கப்பட்டவர்களில் ரஷ்ய துருப்புகளால் கொல்லப்பட்டவர்களும் உள்ளனர் என தெரிவித்துள்ள கிராம நிர்வாகி ஒருவர், பசியால் இறந்தவர்களின் பெயர்களையும் சுவற்றில் எழுதி வைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்ய துருப்புகள் கிராமத்தில் புகுந்து கொள்ளையிடுவதிலேயே குறியாக இருந்ததாக கூறும் ஒருவர், மார்ச் 5ம் திகதி, மொத்த கிராம மக்களையும் திரட்டி, பள்ளியின் அடித்தளத்தில் அமைந்துள்ள அந்த இருட்டு அறையில் சிறைவைத்ததாகவும், அது அவர்களின் சொந்த பாதுகாப்பிற்காக எனவும் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து, ஒரே கழிவறையை அனைவரும் பயன்படுத்தும் நிலை ஏற்பட்டது எனவும், இட,ம் பற்றாக்குறையால் தூங்குவதற்கும் நேர அட்டவணை போடும் நிலை ஏற்பட்டது என்கிறார்கள். ரஷ்ய துருப்புகள் பின்வாங்கிய பின்னரே, ஏப்ரில் 2ம் திகதி அந்த இருட்டு அறையில் இருந்து விடுதலை கிடைத்ததாக எஞ்சிய மக்கள் தெரிவித்துள்ளனர்.