பிரெஞ்சுத் தீவு ஒன்றில் வெடித்த வன்முறை: கலவரத்தில் பலர் காயம்
பிரெஞ்சுத் தீவான Corsicaவில் பொலிசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் பலர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரெஞ்சுத் தீவான Corsicaவில், தேசிய அளவில் பிரபலமான Yvan Colonna என்னும் ஒருவர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டு, அவர் கோமா நிலையை அடைந்துள்ளதையடுத்து, அவரது ஆதரவாளர்கள் பேரணிகளில் இறங்கினர்.
பேரணி போராட்டமாக மாற, போராட்டத்தில் வன்முறை வெடிக்க, பொலிசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் மோதல் உருவாகியுள்ளது. நேற்றிரவு தொடங்கி இன்று வியாழக்கிழமை வரை மோதல்கள் நீடிக்கின்றன.
இந்த Yvan Colonna என்பவர், 1998ஆம் ஆண்டு, Corsicaவின் உச்ச நிலை அதிகாரியான Claude Erignac என்பவரைக் கொன்றதற்காக ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார். இந்நிலையில், இம்மாதம் 2ஆம் திகதி அவருடன் சிறையிலடைக்கப்பட்டுள்ள சக கைதி ஒருவர் கடுமையாக தாக்கியதில் Colonna கோமா நிலைக்குச் சென்றுவிட்டார்.
அதைத் தொடர்ந்து, Corsicaவின் முக்கிய நகரங்களான Ajaccio, Calvi மற்றும் Bastia ஆகிய நகரங்களில் அவரது ஆதரவாளர்கள் பேரணிகளில் இறங்கினார்கள். பேரணி போராட்டமாக மாறி பொலிசாருடன் மோதல் வரை சென்றுவிட்டது.
இந்த மோதலில் Ajaccioவில் மட்டுமே ஒரு ஊடகவியலாளர் உட்பட 14 பேர் காயமடைந்துள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
Colonnaவைத் தாக்கிய Franck Elong Abe என்பவர் மீது பொலிசார் கொலை முயற்சிக் குற்றச்சாட்டு மற்றும் தீவிரவாத அமைப்பு ஒன்றுடன் தொடர்பிலிருந்ததாக குற்றச்சாட்டுகள் பதிவு செய்துள்ளார்கள்.