பிரான்ஸ் முழுவதும் வெடித்த வன்முறை போராட்டங்கள்... அதிகரித்த மேக்ரான் மீதான கோபம்
பிரான்சில் Block Everything என வன்முறை போராட்டங்கள் வெடித்துள்ள நிலையில், நாடு மீண்டும் கலவர பூமியாக மாறியுள்ளது.
பொது ஒழுங்கை அச்சுறுத்துவதாக
முதல் சில மணி நேரங்களிலேயே கிட்டத்தட்ட 200 பேர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக உள்விவகார அமைச்சர் அறிவித்துள்ளார்.
Gare du Nord பகுதியில் உள்ள யூரோஸ்டார் மையம் உட்பட முக்கிய போக்குவரத்து இணைப்புகளை சீர்குலைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதை அடுத்தே கைது நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலோர் பொது ஒழுங்கை அச்சுறுத்துவதாக பாரிஸில் உள்ள பொலிஸ் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும், புதன்கிழமை காலை பரபரப்பான நேரத்தில் பாரிஸின் பெல்ட்வேயை மறிக்க போராட்டக் குழுக்கள் பலமுறை முயன்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மட்டுமின்றி, அவர்கள் தடுப்புகளை அமைத்து, காவல்துறை அதிகாரிகள் மீது பொருட்களை வீசி, போக்குவரத்தைத் தடுத்து மெதுவாக்கினர் மற்றும் பிற எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.
மேற்கு நகரமான ரென்னில் பேருந்து ஒன்று தீக்கிரையாக்கப்பட்டுள்ளது, மேலும் தென்மேற்கில் உள்ள ஒரு ரயில் பாதையில் மின்சார கம்பியில் ஏற்பட்ட சேதம் ரயில் சேவைகளை பாதித்துள்ளது என அமைச்சர் Bruno Retailleau தெரிவித்துள்ளார்.
வெறும் ஒன்பது ஆண்டுகளுக்குள் தனது ஏழாவது பிரதமரை ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் நியமித்த 24 மணி நேரத்திற்குள் இந்தக் கலவரங்கள் வெடித்துள்ளது. இந்த நிலையில், Block Everything போராட்டங்களை எதிர்கொள்ள பிரான்ஸ் முழுவதும் சுமார் 80,000 காவல்துறையினரும் களமிறக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 2018ல் எரிபொருள் விலை உயர்வைக் கண்டித்து Yellow Vest என்ற போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. ஆனால் உண்மையில் பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மேக்ரானுக்கும் அவரது பொருளாதார சீர்திருத்தத் திட்டங்களுக்கும் எதிராகவே அந்த போராட்டங்கள் நடத்தப்பட்டன.
கருப்பு உடைகளுடன்
தற்போதும், Yellow Vest போராட்டங்கள் போலவே, எவரும் தலைமை ஏற்காமல் Block Everything போராட்டங்களும் முன்னெடுக்கப்படுகிறது. குறிப்பாக சனிக்கிழமைகளில் மட்டும் முன்னெடுக்கப்பட்ட Yellow Vest போராட்டங்களால் ஏற்பட்ட சேதம் என்பது 250 மில்லியன் பவுண்டுகள் என்றே மதிப்பிடப்பட்டுள்ளது.
Yellow Vest போராட்டக்காரர்கள் ஜனாதிபதி மேக்ரானை கொள்கை மாற்றங்களுக்கு கட்டாயப்படுத்தியது. எரிபொருள் விலையிலிருந்து சுற்றுச்சூழல் வரிகளை நீக்க வைத்தனர்.
தற்போது Block Everything போராட்டக்காரர்கள் கருப்பு உடைகளுடன் போராட்டத்தில் குதித்துள்ளனர். ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டவர்களில் இதுவரை 75 பேர் கைது செய்யப்பட்டதாக பாரிஸ் காவல்துறை தெரிவித்துள்ளது, ஆனால் அவை எங்கு நடந்தன அல்லது கைதுகளுக்கான காரணம் குறித்த விவரங்களைத் தெரிவிக்கவில்லை.
பாரிஸ் நகரில் மட்டும் 6000 பொலிசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், இந்த ஆர்ப்பாட்டங்களில் 100,000 பேர்கள் வரையில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக பிரெஞ்சு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. பலர் ஜனாதிபதி மேக்ரான் பதவி விலக வேண்டும் என்ற பதாகையுடன் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |