2026 ஐபிஎல் ஏலத்தில் ஒரே ஒரு அசோசியேட் வீரர் - யார் இந்த விரந்தீப் சிங்?
2026 ஐபிஎல் ஏலத்தில் இடம்பெறுள்ள ஒரே அசோசியேட் வீரரான விரந்தீப் சிங் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
2026 ஐபிஎல் ஏலம்
2026 ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் வரும் டிசம்பர் 16 ஆம் திகதி அபுதாபியில் நடைபெற உள்ளது. இதில் 10 அணிகள், 77 வீரர்களை ஏலம் எடுக்க உள்ளது.

1,355 வீரர்கள் ஏலத்தில் பங்கேற்க தங்களது பெயரை பதிவு செய்த நிலையில், 1005 வீரர்கள் நீக்கப்பட்டு, 350 வீரர்கள் ஏலத்தில் பங்கு பெற உள்ளனர். இதில், 240 இந்திய வீரர்கள் மற்றும் 110 வெளிநாட்டு வீரர்கள் ஆவார்கள்.
இதில் இங்கிலாந்தில் இருந்து 21 வீரர்களும், அவுஸ்திரேலியாவில் இருந்து 20 வீரர்களும், நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்காவில் இருந்து தலா 16 வீரர்களும், இலங்கையில் இருந்து 12 வீரர்களும் இடம்பெற்றுள்ளனர்.
மேலும் ஆப்கானிஸ்தானில் இருந்து 10 வீரர்களும், மேற்கிந்திய தீவுகளில் இருந்து 9 வீரர்களும், வங்கதேசத்தில் இருந்து 7 வீரர்களும், அயர்லாந்து மற்றும் மலேசியாவில் இருந்து தலா ஒரு வீரரும் இடம் பெற்றுள்ளனர்.

இதில் உறுப்பு நாடுகளில் இருந்து பங்குபெறும் ஒரே வீரர் என்ற பெருமையை மலேசிய வீரர் விரந்தீப் சிங் (virandeep singh) பெற்றுள்ளார். ரூ.30 லட்சம் அடிப்படை விலையில் ஏலத்தில் பட்டியலிடப்பட்டுள்ளார்.
யார் இந்த விரந்தீப் சிங்?
26 வயதான விரந்தீப் சிங், 13 வயதில் மலேசியா U-16 அணி , 14 வயதில் U-19 அணியில் இடம் பிடித்து, பின்னர் 15 வயதில் தேசிய அணியில் இடம் பிடித்து இளம் வீரர் என்ற பெருமையை பெற்றார்.

மேலும், 20 வயதில் மலேசிய தேசிய அணியின் அணித்தலைவராக நியமிக்கப்பட்டு, T20 அணிக்கு தலைமையேற்ற இளம் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
இதுவரை 108 போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 3,115 ஓட்டங்கள் எடுத்ததுடன், 108 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளார்.
2023 ஆம் ஆண்டில் இந்தோனேசியாவிற்கு எதிரான போட்டியில், ஆட்டமிழக்காமல் 116 ஓட்டங்கள் எடுத்ததே இவரின் அதிகபட்சமாகும்.

T20 கிரிக்கெட் வரலாற்றில், 3000 ஓட்டங்கள் மற்றும் 100 விக்கெட்கள் எடுத்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
மலேசிய கிரிக்கெட் அணியில், 3000 ஓட்டங்கள் குவித்த ஒரே வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

மேலும், 22 முறை ஆட்ட நாயகன் விருது பெற்று, T20 கிரிக்கெட் வரலாற்றில் அதிக ஆட்ட நாயகன் விருது பெற்ற வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
மேலும், நேபாளத்தில் எவரெஸ்ட் பிரீமியர் லீக்கில் சிட்வான் டைகர்ஸ் அணிக்காக விளையாடியுள்ளார், குளோபல் T20 கனடாவில் சர்ரே ஜாகுவார்ஸ் அணியுடனும், ILT20யில் ஷார்ஜா வாரியர்ஸ் அணியுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |