ஒரே போட்டியில் பல சாதனைகளை படைத்த விராட் கோலி - என்னவெல்லாம் தெரியுமா?
ICC சாம்பியன்ஸ் டிராபியில் அவுஸ்திரேலியாவுடனான அரையிறுதி போட்டியில் இந்திய அணி வீரரான விராட் கோலி பல சாதனைகளை படைத்துள்ளார்.
இந்தியா vs அவுஸ்திரேலியா
2025 சாம்பியன்ஸ் டிராஃபி தொடரில் நேற்று(04.03.2025) நடைபெற்ற அரையிறுதி போட்டியில் இந்திய அணி, அவுஸ்திரேலியாவை எதிர்கொண்டு விளையாடியது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது.
அவுஸ்திரேலிய அணி 49.3 ஓவரில் 264 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. அவுஸ்திரேலியா தரப்பில் அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 73 ஓட்டங்களும், அலெக்ஸ் கேரி 61 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
265 ஓட்டம் வெற்றி இலக்குடன் துடுப்பாட்டம் ஆட தொடங்கிய இந்திய அணி, 48.1 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 267 ஓட்டங்கள் குவித்து வெற்றி பெற்று, இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. அதிகபட்சமாக விராட் கோலி 84 ஓட்டங்கள் குவித்தார்.
விராட் கோலி சாதனைகள்
இந்த போட்டியில் விராட்கோலி பல சாதனைகளை படைத்துள்ளார். இந்த போட்டியில், கோலி 84 ஓட்டங்கள் எடுத்ததன் மூலம், சாம்பியன்ஸ் டிராஃபியில் அதிக ஒட்டங்கள் எடுத்த இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். முன்னதாக தவன் 701 ஓட்டங்களை எடுத்து இந்த பட்டியலில் முதலிடத்தில் இருந்தார்.
மேலும், இந்த போட்டியில் ஜாஸ் இங்கிலீஸின் கேட்சை, விராட் கோலி பிடித்ததன் மூலம், சர்வதேச கிரிக்கெட்டில் 335 கேட்சுகள் பிடித்து அதிக கேட்ச் பிடித்த இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
இதனிடையே இந்த போட்டியில் ஆட்டநாயகன் விருது வென்றதன் மூலம், சாம்பியன்ஸ் டிராஃபியில் அதிக ஆட்டநாயகன் விருது பெற்ற இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
சௌரவ் கங்குலி, ரவீந்திர ஜடேஜா, சேவாக் யுவராஜ் சிங் ஆகியோர் 2 ஆட்டநாயகன் விருதுகள் வென்றுள்ள நிலையில், விராட் கோலி 3 ஆட்டநாயகன் விருதுகளை வென்றுள்ளார்.
இந்த போட்டியில் அரைசதம் அடித்ததன் மூலம் ஐசிசி ஒருநாள் தொடர்களில் அதிக அரைசதம் அடித்த வீரர் என்ற உலக சாதனையையும் விராட் கோலி படைத்துள்ளார். இதற்கு முன் சச்சின் டெண்டுல்கர் 23 அரைசதம் அடித்ததே சாதனையாக இருந்தது.
ஐசிசி தொடரின் நாக் அவுட் போட்டிகளில் 1000 ஓட்டங்களை எடுத்த முதல் வீரர் என்ற வரலாற்றையும் விராட் கோலி படைத்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |