பிரபல கிரிக்கெட் வீராங்கனையின் தாயாரை காப்பாற்ற லட்சக்கணக்கில் உதவிய விராட் கோஹ்லி! குவியும் பாராட்டு
கொரோனாவால் பாதிக்கப்பட்ட இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீராங்கனையின் தாயின் சிகிச்சைக்காக விராட் கோஹ்லி நிதியுதவி செய்துள்ளார்.
இந்தியா முழுவதும் கொரோனாவின் இரண்டாம் அலை கோரதாண்டவம் ஆடி வருகிறது. இந்த இக்கட்டான காலத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆக்ஸிஜன், மருத்துவ சிகிச்சை, வாழ்வாதாரத்திற்காக பல பிரபலங்களும் உதவி வருகின்றனர்.
இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்து வரும் இந்திய மகளின் அணியின் முன்னாள் வீராங்கனை ஒருவரின் தாயின் சிகிச்சைக்காக இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லி 6.77 லட்ச ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார்.
ஹைதராபாத்தைச் சேர்ந்த இந்திய மகளிர் அணியின் முன்னாள் வீராங்கனை கே.எஸ். ஷ்ரவந்தி நாயுடுவின் பெற்றோர் இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அவருடைய தாயார் எஸ்.கே.சுமன் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பெற்றோரின் சிகிச்சைக்காக ஏற்கனவே 16 லட்ச ரூபாயை செலவிட்டுள்ள ஷ்ரவந்தி நாயுடு, நிதி நெருக்கடியில் சிக்கியதால் பெற்றோரின் சிகிச்சைக்கு தேவைப்படும் பணத்தை புரட்ட முடியாமல் திணறினார்.
இதனிடையே பிசிசிஐயின் முன்னாள் தெற்கு மண்டல ஒருங்கிணைப்பாளர் (மகளிர் கிரிக்கெட்) வித்யா யாதவ் தன்னுடைய ட்விட்டரில் ஸ்ரவந்தி நாயுடுவின் தாயாரின் நிலை குறித்து எடுத்துரைத்து நிதி திரட்டும் முயற்சியில் ஈடுபட்டார்.
ட்விட்டரில் வித்யா வெளியிட்ட பதிவில் கோஹ்லியையும் அவர் டேக் செய்தார். வித்யா யாதவ், முன்னாள் பிசிசிஐ தலைவர் ஷிவ்லால் யாதவின் சகோதரி ஆவார்.
ட்விட்டரில் இந்த பதிவை பார்த்த கோஹ்லி ஷ்ரவந்தி நாயுடுவின் தாயுடைய கொரோனா சிகிச்சைக்காக 6.77 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார்.
இது குறித்து வித்யா யாதவ் கூறுகையில், நேர்மையாக கூறுகிறேன், கோஹ்லி இந்த உடனடி உதவியை கண்டு நான் ஆச்சரியப்பட்டேன். இவ்வளவு பெரிய கிரிக்கெட் வீரரிடமிருந்து இவ்வளவு பெரிய அணுகுமுறை வெளிப்பட்டுள்ளதாக சிலாகித்துள்ளார்.
இதனிடையில் கிரிக்கெட் வீரராக மட்டுமின்றி மனிதநேயமிக்க நபராகவும் கோஹ்லி நம்பர் 1 தான் என ரசிகர்கள் அவரை பாராட்டி வருகின்றனர்.