ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள்
அமெரிக்காவில் முக்கியமான தொழில்நுட்ப மாநாடு ஒன்றில் கலந்துகொள்ளும் பொருட்டு B1/B2 விசாவிற்கு விண்ணப்பித்தவருக்கு டெல்லியில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகம் கடும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
மூன்று கேள்விகள்
வெறும் 60 நொடிகளில் அவரது விசா விண்ணப்பத்தை நிராகரித்ததாக சமூக ஊடக பக்கத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார். அந்த தூதரக அதிகாரி தம்மிடம் வெறும் மூன்றே மூன்று கேள்விகள் கேட்டதாகவும், அதற்கு பதிலளித்த அடுத்த நொடி, விசா நிராகரிக்கப்பட்டதாக அறிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மூத்த மென்பொருள் பொறியாளரான அவர், தற்போது தமது சக மென்பொருள் ஊழியர் சமூகத்திடம் கருத்துக் கோரியுள்ளார். என்ன தவறு நடந்தது, அடுத்த முறை எவ்வாறு இதை எதிர்கொள்வது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
அந்த அதிகாரி அவரது பயணத்தின் நோக்கம், முந்தைய சர்வதேச பயணம் மற்றும் அவருக்கு அமெரிக்காவில் ஏதேனும் தொடர்புகள் உள்ளதா என மூன்று கேள்விகள் மட்டுமே கேட்டதாக அவர் பதிவு செய்துள்ளார்.
அட்லாண்டாவில் 2025 ஆம் ஆண்டுக்கான Kubecon + CloudNative Con தொழில்நுட்ப மாநாட்டில் கலந்துகொள்ளவே அவர் விசாவிற்கு விண்ணப்பித்துள்ளார்.
ரூ 1 கோடி சம்பளம்
லிதுவேனியா, மாலத்தீவுகள் மற்றும் இந்தோனேசியாவிற்கு இதற்கு முன்னர் பயணித்ததாக பதிலளித்துள்ளார். மேலும், அமெரிக்காவில் குடும்ப உறுப்பினர்கள் அல்லது நண்பர்கள் என எவரும் இல்லை என்றும் பதிலளித்துள்ளார்.
இதனையடுத்தே பிரிவு 214(b) இன் கீழ் விசா நிராகரிக்கப்படுவதாக அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார். கடந்த 11 ஆண்டுகளாக பெருநிறுவனம் ஒன்றில் பணியாற்றிவரும் தாம், ஆண்டுக்கு கிட்டத்தட்ட ரூ 1 கோடி சம்பளம் வாங்குவதாகவும் குறிப்பிட்டுள்ள அவர்,

தமக்கு 8 மாதத்தில் ஒரு மகள் இருப்பதையும் குறிப்பிட்டுள்ளார். இதனால், மாநாடு முடிந்ததும் நாடு திரும்புவதே தமது நோக்கம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது இந்தியாவின் தொழில்நுட்ப ஊழியர்கள் சமூகம் அளித்துள்ள ஊக்கத்தின் அடிப்படையில், அவர் மீண்டும் விண்ணப்பிக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |