உக்ரைன் கொடூரங்கள்... ஒன்றுதிரண்ட உலக நாடுகள்: தனித்துவிடப்பட்ட ரஷ்யா
உக்ரைன் மீது கொடூரத் தாக்குதலை முன்னெடுத்து, ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் ராணுவ வீரர்களின் உயிரைப் பறித்த நிலையில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் சர்வதேச அளவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து 7 நாட்களை எட்டியுள்ள நிலையில், நேட்டோ உறுப்பு நாடுகளும் ஐரோப்பிய ஒன்றியமும் உக்ரைனுக்கு ஆயுதங்கள், இராணுவ உதவி மற்றும் மனிதாபிமான அடிப்படையிலான அனைத்து உதவிகளையும் முன்னெடுத்து வருகிறது.
மட்டுமின்றி, ரஷ்யா மீது பொருளாதார தடைகளும் விதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு வந்தாலும், குறிப்பிட்ட சில நாடுகள் ரஷ்யாவை ஆதரித்தும் வருகின்றன.
இதனிடையே, ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் முன்னெடுக்கப்பட்ட வாக்கெடுப்பில் 193 உறுப்பு நாடுகளில் 141 நாடுகள் உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலைக் கண்டித்து வாக்களித்துள்ளது, ஐந்து நாடுகள் மட்டும் ரஷ்யாவுக்கு ஆதரவாக வாக்களித்தன.
இதில், ரஷ்யா உடனடியாக போரை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் எனவும், உக்ரைனில் புகுந்துள்ள துருப்புகள் நிபந்தனைகள் ஏதுமின்றி வெளியேற வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியா உள்ளிட்ட 37 நாடுகள் உக்ரைனில் நிகழ்த்தப்படும் கொடூரங்களை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட வேண்டும் எனவும், போர் குற்றங்களுக்கு ரஷ்ய ஜனாதிபதி புடின் பொறுப்பேற்க வேண்டும் எனவும் கோரியுள்ளனர்.
இந்தியா, சீனா உட்பட 35 நாடுகள் வாக்களிக்காமல் விலகிக்கொள்ள, பெலாரஸ், வட கொரியா, எரித்திரியா, ரஷ்யா மற்றும் சிரியா ஆகிய ஐந்து நாடுகள் ரஷ்யாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
மேலும், மேற்கத்திய நாடுகளே ரஷ்யாவை போருக்கு தூண்டியது எனவும், உக்ரைன் விவகாரத்தில் தங்கள் ஆதரவு எப்போதும் ரஷ்யாவுக்கு எனவும் பெலாரஸ் பகிரங்கமாக அறிவித்துள்ளது.
பொருளாதாரம், இராணுவம் மற்றும் அரசியல் ரீதியாக ரஷ்யாவை நம்பியிருக்கும் பெலாரஸ் தங்கள் நாட்டை உக்ரைன் தாக்குதலுக்கான களமாக ரஷ்யாவை பயன்படுத்த அனுமதித்துள்ளது.
மட்டுமின்றி, வெனிசுலா, கியூபா மற்றும் மியான்மர் ஆகிய நாடுகளும் ரஷ்யாவிற்கும் உக்ரைனில் அதன் பிராந்திய அபிலாஷைகளுக்கும் ஆதரவை தெரிவித்துள்ளன.
பல ஐரோப்பிய நாடுகளுடன் வரலாற்று ரீதியாக வலுவான தொடர்புகள் இருந்தபோதிலும், ரஷ்யா கடந்த வாரத்தில் மட்டும் எண்ணற்ற கூட்டாளிகளை இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.