டிரம்புக்கு எதிரான வாக்கெடுப்பு... அமெரிக்க நாடாளுமன்றத்தில் பாதுகாப்புப் படைகள் குவிப்பு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்புக்கு எதிரான வாக்கெடுப்பு நடைபெற இருக்கும் நிலையில், மீண்டும் வன்முறை ஏற்படுவதைத் தடுக்க தேசியப் பாதுகாப்புப் படைகள் குவிக்கப்பட்டுள்ளனர்.
தலைநகர் வாஷிங்டன் முழுவதும் சுமார் 20,000 ராணுவ வீரர்கள் துப்பாக்கிகளுடன் குவிக்கப்பட்டுள்ளனர்.
அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஜனவரி 6-ம் திகதி ஜோ பைடன் வெற்றியை அங்கீகரிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது நாடாளுமன்ற கட்டிடத்தில் புகுந்த டிரம்ப் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். இதனையடுத்தே, தற்போது தலைநகர் வாஷிங்டனில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்தியுள்ளனர்.
அமெரிக்க நாடாளுமன்ற முற்றுக்கைக்குப் பொறுப்பேற்று ஜனாதிபதி டிரம்ப் பதவி விலக வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
மேலும், துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் சட்டப்பிரிவு 25ஐ பயன்படுத்தி, டிரம்பை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் முன் வைக்கப்பட்டது.
இது தொடர்பான தீர்மானமும் பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டது. இருப்பினும், மைக் பென்ஸ் சட்டப்பிரிவு 25ஐ பயன்படுத்த மறுத்துவிட்டார்.
இதையடுத்து டிரம்ப் மீது, பதவி நீக்க தீர்மானத்தை ஜனநாயகக் கட்சி எம்பிகள் முன்மொழிந்துள்ளனர். இது குறித்து விவாதம் தற்போது நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், கடந்த 6-ம் திகதி நடைபெற்றதைப் போல மீண்டும் நாடாளுமன்ற கட்டிடத்தில் வன்முறை ஏற்படுவதைத் தடுக்க தேசியப் பாதுகாப்புப் படைகள் குவிக்கப்பட்டுள்ளனர்.
மட்டுமின்றி சக உறுப்பினர்களே பாதுகாப்பு கருதி ஆயுதங்களுடன் அவைக்கு வர வாய்ப்புள்ளதாகவும் அச்சம் எழுந்துள்ளது.
இதனிடையே, அமெரிக்க மேல் சபை சபாநாயகர் நான்சி பெலோசியின் அலுவலகம் அருகே தேசியப் பாதுகாப்புப் படைகள் ஓய்வு எடுத்துவருவது போன்ற புகைப்படங்களும் வெளியாகியுள்ளது.


