ஐசிசியின் சிறந்த வீரருக்கான விருது: வங்கதேச வீரர் தெரிவு
மே மாதத்துக்கான சிறந்த கிரிக்கெட் வீரராக வங்கதேசத்தின் முஷ்ஃபிகுர் ரஹிம் தேர்வாகியுள்ளார்.
மாதத்தின் சிறந்த வீரா்/வீராங்கனை என்கிற பெயரில் புதிய விருதை அறிமுகம் செய்துள்ளது ஐசிசி.
சா்வதேச கிரிக்கெட்டில் அனைத்து வகை போட்டிகளிலும் சிறப்பாகச் செயல்படும் வீரா், வீராங்கனைகளை ஆண்டு முழுவதுமாக அங்கீகரிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்படவுள்ளதாக ஐசிசி தெரிவித்துள்ளது.
முதல் மூன்று மாதத்துக்கான விருதுகளை இந்திய வீரர்களே பெற்றார்கள். ஜனவரி மாதத்தின் சிறந்த வீரராக ரிஷப் பந்த், பிப்ரவரி மாதத்தின் சிறந்த வீரராக அஸ்வின், மார்ச் மாதத்தின் சிறந்த வீரராக இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமார் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டார்கள்.
இந்நிலையில் மே மாதத்துக்கான சிறந்த வீரருக்கான பரிந்துரைப் பட்டியலில் ஆடவர் பிரிவில் பாகிஸ்தானின் ஹசன் அலி, இலங்கையின் பிரவீண் ஜெயவிக்ரமா, வங்கதேசத்தின் முஷ்ஃபிகுர் ரஹிம் ஆகியோர் இடம்பெற்றார்கள்.
மகளிர் பிரிவில் கேத்ரின் பிரைஸ், கேபி லூயிஸ், லியா பால் ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டார்கள்.
இதனையடுத்து மே மாதத்துக்கான சிறந்த வீரராக வங்கதேசத்தின் முஷ்ஃபிகுர் ரஹிமும் மகளிர் பிரிவில் ஸ்காட்லாந்து சகலதுறை வீராங்கனை கேத்ரின் பிரைஸும் தெரிவாகியுள்ளதாக ஐசிசி அறிவித்துள்ளது.