மிரட்டலும், கலகத்திற்கும் ரஷ்யா அடிபணியாது... ஜனாதிபதி புடின் எச்சரிக்கை: இறுகும் நெருக்கடி
வாக்னர் கூலிப்படையால் முன்னெடுக்கப்பட்ட கலகத்தை முறியடிக்க உயிரை விட்ட விமானிகளுக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளார்.
ரஷ்யர்களுக்கும் புடின் நன்றி
அத்துடன், வாக்னர் கூலிப்படையால் போர் விமானங்கள் பல சுட்டு வீழ்த்தப்பட்டதையும் புடின் ஒப்புக்கொண்டுள்ளார். வாக்னர் கூலிப்படையால் ஏற்படுத்தப்பட்ட நெருக்கடி முறியடிக்கப்பட்ட நிலையில், முதல் முறையாக விமானிகளின் இறப்பை ஜனாதிபதி புடின் வெளிப்படையாக அறிவித்துள்ளார்.
@AP
மட்டுமின்றி, மாஸ்கோவில் வாக்னர் கூலிப்படையின் அணிவகுப்பினை எதிர்கொள்ள தேசபக்தி ஒற்றுமையைக் காட்டிய ரஷ்யர்களுக்கும் விளாடிமிர் புடின் நன்றி தெரிவித்துள்ளார்.
வாக்னர் கூலிப்படை தலைவர் Yevgeny Prigozhin தலைமையில் ரஷ்ய ராணுவத்திற்கு எதிராக சனிக்கிழமை முன்னெடுக்கப்பட்ட ஆயுத கலகமானது முறியடிக்கப்பட்டது. இதில் வாக்னர் கூலிப்படை ரஷ்ய போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியுள்ளது.
இந்த நெருக்கடிக்கு பின்னர் திங்களன்று பதிவு செய்யப்பட்ட காணொளி ஒன்றை ரஷ்ய ஜனாதிபதி மாளிகை வெளியிட்டுள்ளது. அதில், நாட்டை காக்க அனைத்து தரப்பினரும் ஒன்று திரண்டதற்கு புடின் நன்றி தெரிவித்துள்ளார்.
நாட்டுக்கும், மக்களுக்கும் துரோகம்
மேலும், ரஷ்யா எந்த மிரட்டலும், கலகத்திற்கும் அடிபணியாது எனவும் குறிப்பிட்டுள்ளார். நாட்டை இரத்தக்களரியான உள்நாட்டுக் கலவரத்தில் மூச்சுத் திணறடிக்க எதிரிகள் திட்டமிடுகிறார்கள் எனவும், ஆனால் தேசப்பற்று மிகுந்த வீரர்கள் உயிரைக் கொடுத்து அந்த திட்டத்தை முறியடித்துள்ளனர் எனவும் புடின் குறிப்பிட்டுள்ளார்.
@EPA
சனிக்கிழமை நடந்த தாக்குதல் சம்பவத்தில் எத்தனை விமானங்கள் வீழ்த்தப்பட்டது மற்றும் எத்தனை விமானிகள் கொல்லப்பட்டனர் என்பது தொடர்பில் உறுதியான தகவல் வெளியாகவில்லை. ஆனால், சுமார் 13 விமானிகள் கொல்லப்பட்டதாக உள்ளூர் சமூக ஊடக பக்கம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
இதனிடையே, வாக்னர் தலைவர் Prigozhin பெயரை குறிப்பிடாமல், கலகத்தை முன்னெடுத்தவர்கள் தங்கள் நாட்டுக்கும், மக்களுக்கும் துரோகம் செய்தார்கள் எனவும், ரஷ்யாவின் எதிரிகள் ரஷ்ய வீரர்கள் ஒருவரையொருவர் கொல்லவும், இராணுவ வீரர்களையும் பொதுமக்களையும் கொல்லவும் விரும்பினர், இதனால் ரஷ்யா தோல்வியடையும், நம் சமூகம் பிளவுபடும் என்றும் விரும்பினர் என புடின் காட்டமாக விமர்சித்துள்ளார்.
மேலும், வாக்னர் கூலிப்படையின் நடவடிக்கைகள் தற்போது முடக்கப்பட்டுள்ளது. அவர்கள் விரும்பினால் பாதுகாப்பு அமைச்சகத்துடன் புதிய ஒப்பந்தம் ஒன்றை முன்னெடுக்கலாம் அல்லது பெலாரஸ் நாட்டுக்கு சென்றுவிடவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |