கால்களை வலுவாக வைத்து கொள்ள வேண்டுமா? இதோ சில எளிய பயிற்சிகள்
நாம் வயதாகும்போது, நம் கால்கள் எப்போதும் வலுவாக இருக்க வேண்டும்.
நீண்ட ஆயுளுக்கு வலுவான கால்கள் மிக முக்கியமானதும் அவசியமானதுமாகும்.
அந்தவகையில் கால்களை வலுவாக வைத்து கொள்ள உதவும் சில உடற்பயிற்சிகளை எப்படி செய்யலாம் என்பதை இங்கே பார்ப்போம்.
ஹீல் ரைஸ்
நேராக நிற்கவும். கைகளை இடுப்பில் வைத்துக் கொள்ளவும். முன் கால் விரல்களைத் தரையில் பதித்தபடி நின்றுகொண்டு, பின்னங்கால் பாதத்தை முடிந்தவரை உயர்த்தி பின் கீழ் இறக்கி, தரையைத் தொடாமல் மீண்டும் உயர்த்தவும்.
இதுபோல் 15 எண்ணிக்கையில், இரண்டு செட்கள் செய்யவும். பலன்கள்: கண்டந்தசை வலுப்பெறும். முட்டி வலி, முதுகு வலி குணமாகும். உடலின் கீழ்ப் பகுதி வலு பெறும்.
ஃப்ரன்ட் அண்ட் சைடு லெக் ரைஸ்
சுவருக்கு அருகே நேராக நின்றுகொள்ளவும். வலது கையை சுவரில் வைத்துக்கொண்டு, இடது கையை இடுப்பில் வைக்கவும். இந்த நிலையில் இடது காலை முடிந்த வரை முன்னால் உயர்த்தவும். பின்பு பழைய நிலைக்கு வந்த பின், இடது பக்கம் உயர்த்தவும்
இதுபோல் 15 முறை செய்தவுடன், இடது கையை சுவரிலும் வலது கையை இடுப்பிலும் மாற்றிவைத்து 15 முறை செய்ய வேண்டும். இது ஒரு செட். சில விநாடிகள் ரிலாக்ஸ் செய்த பின், மேலும் 2 செட்கள் செய்ய வேண்டும்.
ஃப்ரன்ட் அண்ட் சைடு நீ அப்ஸ்
சுவரில் அருகே நேராக நிற்கவும். வலது கால் முட்டியை மடக்கி இடுப்பளவு மேலே உயர்த்திய பின், தரையைத் தொடாமல் காலை இறக்கவும். பிறகு, காலை அதே நிலையிலேயே பக்கவாட்டில் உயர்த்தவும். இதேபோல் இடது காலில் செய்யவும்.
ஒரு செட் 15 என்ற எண்ணிக்கையில் இரண்டு செட்கள் செய்யவும். தொடைகள் வலு பெறும். அடி வயிறு, கால் தசைகள் பலம் பெறும்.
ஃப்ரன்ட் நீ அப்ஸ்
சுவற்றின் அருகே நேராக நிற்கவும். வலது கால் முட்டியை மடக்கி, அந்த நிலையில் இடுப்பளவு அப்படியே உயர்த்தவும். தரையைத் தொடாமல், காலை மேலும் கீழும் இறக்கவும். ஒரு செட் 15 எண்ணிக்கை என்ற அளவில் இரண்டு செட்கள் செய்யவும். முன், பின் தொடைப் பகுதி வலுப்பெறும். அடிவயிறு பலப்படும். மொத்த உடலும் வலுவடையும். கால் தசைகள் உறுதியாகும்.