பிரித்தானியாவிலிருந்து நாடுகடத்தப்பட உள்ள புலம்பெயர்ந்தோருக்கு இலங்கையில் புத்த மதத்தைத் தழுவியவர் கூறும் எச்சரிக்கை செய்தி
பிரித்தானியாவுக்குள் சட்ட விரோதமாக நுழைந்த புலம்பெயர்ந்தோரை ருவாண்டாவுக்கு நாடுகடத்தும் பிரித்தானியாவின் திட்டம் குறித்து அறிந்ததும், தயவு செய்து ருவாண்டாவுக்கு செல்லாதீர்கள், நான் பட்ட கஷ்டம் எனக்குத்தான் தெரியும் என்கிறார் ருவாண்டா நாட்டவர் ஒருவர்.
இலங்கையில் புத்த மதத்தைத் தழுவியவரான Olivier Birar (40) என்பவர், தற்போது ஜேர்மனியில் வாழ்ந்து வருகிறார்.
பிரித்தானியாவுக்குள் சட்ட விரோதமாக நுழைவோரை ருவாண்டாவுக்கு நாடுகடத்தும் பிரித்தானியாவின் திட்டம் குறித்து அறிந்த Olivier, உடனடியாக லண்டனிலிருக்கும் தன் நண்பர் ஒருவரை அழைத்து, தான் அது குறித்து ஏதாவது செய்யவேண்டும் என்று கூறியிருக்கிறார்.
அதன்படி, ருவாண்டாவுக்கு புலம்பெயர்ந்தோர் வந்தால் என்ன ஆகும் என்பது குறித்து வெளி உலகுக்குத் தெரியப்படுத்துவதற்காக ஊடகங்களுக்கு பேட்டியளித்துள்ளார் Olivier.
இனப்படுகொலை தொடர்பில் புத்தகம் ஒன்று எழுதுவதற்காக, இனப்படுகொலையில் தப்பியவர்களிடம் பேட்டிகள் எடுத்துக்கொண்டிருந்த Olivier ஒரு நாள் திடீரென பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கண்களைக் கட்டி அவரை கைது செய்து அழைத்துச் சென்ற பொலிசார், Kwa Gacinya prison என்னும் பயங்கர சிறையின் இருட்டறை ஒன்றில் அவரை அடைத்து, 42 நாட்கள் அவரை வெளிச்சத்தைக் காணவிடாமல், மின்சார ஷாக் கொடுத்து கொடுமைப்படுத்தியதாகவும் இயற்கை உபாதைகளைக் கழிக்க மூன்று நிமிடம் மட்டுமே, சிறுநீர் கழிக்க போத்தல் மட்டுமே, படுத்துறங்க வெறும் காங்கிரீட் தரை மட்டுமே என கடும் கட்டுப்பாடுகள் விதித்ததாகவும் தெரிவிக்கிறார்.
சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டதும் இலங்கைக்குச் சென்ற Olivier புத்த மதத் துறவியாகியிருக்கிறார். தற்போது ஜேர்மனியில் தற்காலிக வாழிட உரிமம் பெற்று வாழும் Olivier, வருவாய்க்காக ஒரு துணை செவிலியராக பணியாற்றிவருகிறார்.
ருவாண்டாவின் உண்மை நிலை வெளி உலகுக்குத் தெரியாது என்று கூறும் Olivier, எளிமையாகச் சொல்லவேண்டுமானால், ருவாண்டாவுக்கு அனுப்பி வைக்கப்படும் புலம்பெயர்ந்தோர், உணவுக்காக தெருவில் நிற்கும் நிலை ஏற்படும் என எச்சரிக்கிறார்.