ஈரானில் போலி வேலைவாய்ப்புகளை நம்பி இந்தியர்கள் ஏமாற வேண்டாம்.., அரசு எச்சரிக்கை
ஈரானில் வேலை வாய்ப்புகளைக் கருத்தில் கொள்ளும்போது குடிமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு இந்தியா வலியுறுத்தியுள்ளது.
சமீபத்தில் பல இந்தியர்கள் மோசடியான வேலை வாய்ப்புகளுக்கு பலியாகி பணத்தை பறிகொடுத்தது மட்டுமல்லாமல் கடத்தல்களுக்கும் உள்ளாக்கப்பட்டுள்ளனர்.
அரசு எச்சரிக்கை
வேலை அல்லது மூன்றாம் நாடுகளில் வேலைவாய்ப்பு வாங்கித் தருவதாக வாக்குறுதி அளித்து ஈரானுக்கு பயணம் செய்ய இந்தியர்களை ஏமாற்றுவதாக பல புகார்கள் வந்துள்ளதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் (MEA) தெரிவித்துள்ளது.
வேலைவாய்ப்பை நம்பி ஈரானுக்கு செல்லும் இந்தியர்கள் குற்றக் கும்பல்களால் கடத்தப்பட்டுள்ளனர். மேலும் அவர்களை விடுவிப்பதற்காக அவர்களது குடும்பத்தினரிடமிருந்து பணம் கேட்கின்றனர் என்று வெளியுறவு அமைச்சகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இது குறித்து இந்தியர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்திய அரசு, இந்த சூழலில், அனைத்து இந்திய குடிமக்களும் இதுபோன்ற வேலைவாய்ப்பு வாக்குறுதிகள் அல்லது சலுகைகள் குறித்து கடுமையான விழிப்புணர்வுடன் இருக்குமாறு எச்சரித்துள்ளது.
இந்தியர்களுக்கான ஈரானின் விசா இல்லாத நுழைவுக் கொள்கை சுற்றுலாவிற்கு கண்டிப்பாகப் பொருந்தும் என்றும் அதிகாரிகள் தெளிவுபடுத்தினர்.
அதே சமயம், வேலைவாய்ப்பு அல்லது பிற நோக்கங்களுக்காக ஈரானுக்கு விசா இல்லாத நுழைவை உறுதியளிக்கும் முகவர்கள் குற்றக் கும்பல்களுடன் உடந்தையாக இருக்கலாம் என்றும் இந்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |