அவனுக்கு அந்த கனவு இருந்தது! தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தருக்காக அவரது தந்தை செய்துள்ள ஒரு நெகிழ வைக்கும் செயல்!
தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தருக்காக அவரது தந்தை தனி வீட்டில் வசித்து வரும் நிலையில் அதற்கான நெகிழவைக்கும் காரணம் தெரியவந்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடி வருபவர் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர். இவரது தந்தை எம்.சுந்தர் சென்னை வருமான வரித் துறையில் பணிபுரிகிறார். வாரத்திற்கு 2-3 முறை அலுவலகத்திற்கு செல்கிறார்.
நகரத்தில் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதுபோன்ற சூழ்நிலையில், வாஷிங்டன் சுந்தருக்கு இங்கிலாந்து செல்வதில் சிக்கல் ஏற்படக்கூடாது என்பதால், தனது வீட்டை விட்டு விலகி இருக்க வாஷிங்டன் சுந்தரின் தந்தை முடிவு செய்துள்ளார். அதன்படி தனியாக வீடு எடுத்து தங்கியுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், வாஷிங்டன் சுந்தர் ஐ.பி.எல்-ல் இருந்து திரும்பியதிலிருந்து, நான் வேறொரு வீட்டில் வசித்து வருகிறேன். என் மனைவியும் மகளும் வாஷிங்டனுடன் சுந்தருடன் வசித்து வருகிறார்கள்.
ஏனெனில் அவர்கள் வீட்டை விட்டு வெளியே செல்வதில்லை. நான் அலுவலகம் சென்று வருகிறேன். என்னால் வாஷிங்டன் சுந்தருக்கு தொற்று ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம் எனக்கு உள்ளது.
வீடியோ அழைப்பின் மூலம் நான் என் குடும்பத்தைக் காண்கிறேன். வாஷிங்டன் சுந்தருக்கு எப்போதுமே இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானம் மற்றும் பிற மைதானங்களில் விளையாட வேண்டும் என்ற கனவு இருந்துள்ளது.
இது அவனது பல நாள் இலக்காக இருந்துள்ளது. எந்த சூழலிலும் வாஷிங்டன் சுந்தர் இந்த இங்கிலாந்து பயணத்திற்கான வாய்ப்பை இழக்க விரும்பவில்லை என கூறியுள்ளார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடர் ஆகியவற்றுக்கான 20 பேர் கொண்ட இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தர் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.