இதை பார்த்து தான் சாதிக்க ஆசை ஏற்பட்டது! ஜோ பைடனிடம் பேசிய சாதனை பெண் ஸ்வாதி மோகன்.. அவர் யார் தெரியுமா?
விண்வெளி ஆய்வக பணியில் சேரும் ஆர்வம் எப்படி வந்தது என்பது குறித்து சாதனைப்பெண்ணான ஸ்வாதி மோகன் ஜோ பைடனிடம் பேசியுள்ளார்.
அமெரிக்க விண்வெளி ஆய்வகமான 'நாசா' செவ்வாய் கிரகம் குறித்த ஆய்வுக்காக 'பர்சிவெரன்ஸ்' என்ற விண்கலத்தை அனுப்பியது.
இந்த விண்கலத்தில் இருந்து 'ரோவர்' எனப்படும் கண்காணிப்பு வாகனம் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் கடந்த மாதம் வெற்றிகரமாக தரை இறங்கியது.
நாசாவின் இந்த சாதனை முயற்சிக்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விண்வெளி பொறியாளர் ஸ்வாதி மோகன் தலைமை வகித்தார்.
இதையடுத்து பொறியாளர் ஸ்வாதி மோகனுடன் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வீடியோ அழைப்பு மூலமாக பேசி அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.
அப்போது ஸ்வாதி மோகன் கூறுகையில், எனக்கு 1 வயது இருக்கும் போது என் பெற்றோருடன் அமெரிக்கா வந்தேன். குழந்தையாக இருந்தபோது பிரபல தொலைக்காட்சி தொடரான ஸ்டார் ட்ரெக்கை ரசிப்பேன்.
அதில் நம் கற்பனைக்கு அப்பாற்பட்ட விண்வெளி அறிவியல் குறித்து காட்டப்படும். அதை பார்த்த பிறகு தான் விண்வெளி துறையில் சாதிக்க ஆசை ஏற்பட்டது என கூறியுள்ளார்.
