உலகிலேயே இந்த நாட்டின் குடிநீர்தான் மிகச் சிறந்தது: காரணம் இதுதான்
உலகிலேயே சுவிட்சர்லாந்து நாட்டின் குடிநீர்தான் மிகச் சிறந்தது என்கிறது ஐக்கிய நாடுகள் அமைப்பு.
சுவிட்சர்லாந்தின் குடிநீரில் பெருமளவு நீரோடைகள், ஆறுகள், பனிப்பாறைகள் மற்றும் 1,500 ஏரிகளிலிருந்து கிடைக்கிறது.
80 சதவிகிதம் அளவுக்கு இயற்கை ஊற்றுகளிலிருந்தும், நிலத்தடி நீரிலிருந்தும் நீர் பயன்பட, மீதமுள்ள நீர் ஏரிகளிலிருந்து எடுக்கப்படுகிறது.
எப்போதுமே சுவிஸ் குடிநீர் தரமானதாகவே இருந்ததா?
விடயம் என்னவென்றால், சுவிட்சர்லாந்தில் எப்போதுமே குடிநீர் இப்படி சிறந்த குடிநீராக இருக்கவில்லை என்பதுதான் உண்மை.
பெரிய அளவில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் இல்லாததால் நீரின் நிலைமை மோசமாகத்தான் முன்பு இருந்துள்ளது.
அதற்குப் பிறகு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அதிகரிக்க, இன்று 97 சதவிகித வீடுகள் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களுடன் இணைக்கப்பட்டுள்ளன.
அதாவது, நீராதாரங்களில் கழிவு நீர் நேரடியாக கலக்காமல், சுத்திகரிக்கப்பட்டு பின் வெளியேற்றப்படுகிறது.
அத்துடன், தொழிற்சாலைகள் சிறந்த வடிகட்டிகளைப் பயன்படுத்துவதும், விவசாயிகள் ரசாயன உரங்களை தவிர்ப்பதும், சோப்புகளில் பாஸ்பேட்டுகள் தடை செய்யப்பட்டுள்ளதும் சுவிட்சர்லாந்தின் நீராதாரங்கள் கெட்டுப்போகாமல் இருக்க உதவுகின்றன.
ஆகவே, சுவிட்சர்லாந்தில் தைரியமாக குழாய்களில் வரும் குடிநீரையும், குடிநீருக்காக அமைக்கப்பட்டுள்ள நீரூற்றுகளில் வரும் நீரையும் குடிக்கலாம்.
மழை பெய்து, பெருவெள்ளம் ஏற்பட்டு, கழிவு நீர் கலக்கும் அபாயம் இருந்தால், குழாய்களில் வரும் நீரை கொதிக்கவைத்துக் குடிக்கவும், நீரூற்றுகளில் உள்ள நீரை தவிர்க்கவும் அதிகாரிகள் அறிவுறுத்துவார்கள்.
அந்த நேரம் தவிர்த்து மற்ற நேரங்களில் தாராளமாக குழாய்களில் வரும் குடிநீரையும், குடிநீருக்காக அமைக்கப்பட்டுள்ள நீரூற்றுகளில் வரும் நீரையும் மக்கள் குடிக்கலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |