தினமும் செத்துக்கொண்டிருக்கிறோம்... கனடாவில் சுட்டுக்கொல்லப்பட்ட இந்திய மாணவனின் தாய்
இந்தியாவிலிருந்து கனடாவுக்கு கல்வி கற்பதற்காக சென்ற மாணவர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், அவர் ஏன் கொல்லப்பட்டார் என்ற கேள்விக்கான பதில் கிடைக்காத நிலையில், தாங்கள் தினமும் செத்துக்கொண்டிருப்பதாக அவரது தாய் கண்ணீர் மல்கத் தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் மாதம் 7ஆம் திகதி, Seneca கல்லூரியில் பயின்றுவந்த கார்த்திக் வாசுதேவ் (21), பகுதி நேர பணிக்காக சென்றுகொண்டிருந்தபோது, ரொரன்றோவிலுள்ள Sherbourne சுரங்க ரயில் நிலையத்துக்கு வெளியே சுட்டுக் கொல்லப்பட்டார்.
அவருடன் மற்றொரு 35 வயது நபரும் கொல்லப்பட்டார். இந்த கொலைகள் தொடர்பாக Richard Jonathan Edwin (39) என்ற நபர் கைது செய்யப்பட்டார்.
Richardக்கும், அவரால் கொல்லப்பட்டவர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், கனடாவில் தன் மகன் தங்கியிருந்த அறையிலிருந்து அவருடைய பொருட்களை சேகரிப்பதற்காக கார்த்திக்குடைய குடும்பத்தினர் ரொரன்றோ வந்துள்ளனர்.
தன் மகன் படிக்கும் கல்லூரி, அவன் தங்கியிருக்கும் அறை, அவனுக்குப் பிடித்தமான இடங்கள் எல்லாவற்றையும் பார்ப்பதற்காக கனடாவுக்கு வர பெரிதும் ஆசைப்பட்டார்கள் கார்த்திக்குடைய குடும்பத்தினர்.
இப்போது அவர்கள் கனடா வந்திருக்கிறார்கள், அவரது அறையில்தான் இருக்கிறார்கள், ஆனால், அவர்களுடன் கார்த்திக் இல்லை!
எங்களை தினமும் வருத்திக்கொண்டிருக்கும் கேள்விகளுக்கு பதில் வேண்டும் என்கிறார் கார்த்திக்கின் தாயாகிய பூஜா வாசுதேவ். பிள்ளையை இழந்து இரண்டு மாதங்களாக தாங்கள் சரியான தூக்கமின்றித் தவிப்பதாகக் கண்ணீர் மல்கத் தெரிவிக்கும் பூஜா, அந்த நபர் கார்த்திக்கை மட்டும் கொல்லவில்லை, எங்கள் மொத்தக் குடும்பத்தையும் கொன்றுவிட்டார் என்கிறார்.
எங்கள் பிள்ளை ஏன் கொல்லப்பட்டான் என்று தெரியாமல் தினமும் நாங்கள் செத்துக்கொண்டிருக்கிறோம் என்று பூஜா கூற, எனக்கு ஒரே ஒரு நண்பன்தான் இருந்தான், அது என் அண்ணன், என்று கூறும் கார்த்திக்கின் தம்பி பார்த் வாசுதேவ் (16), தற்போது அண்ணன் இல்லாமல் வாழ்வே வெறுமையாகிப்போனதாக தெரிவிக்கிறார்.
தானும் தன் மனைவியும் தங்கள் மொத்த சேமிப்பையும் மகனுடைய கல்விக்காக செலவிட்டுவிட்டதாக தெரிவித்திருந்தார் கார்த்திக்கின் தந்தையான ஜித்தேஷ் வாசுதேவ்.
அத்துடன், தங்கள் வீட்டையும் அடமானம் வைத்து 50,000 டொலர்கள் கடன் வாங்கித்தான் தங்கள் மகன் கார்த்திக்கை கனடாவுக்கு தாங்கள் அனுப்பியதாக தெரிவித்த ஜித்தேஷ், அந்த பணம் கார்த்திக்கினுடைய முதலாம் ஆண்டு கல்விக்கட்டணத்துக்கு மட்டுமே போதுமானதாக இருந்ததாகவும் தெரிவித்திருந்தார்.
இப்படி தங்கள் வாழ்வாதாரத்துக்காக வைத்திருந்த மொத்த பணத்தையும் செலவிட்டு பிள்ளையை கனடாவுக்கு அனுப்பிவிட்டு, இப்போது கார்த்திக்கின் குடும்பம் அவரை இழந்து தவிக்கும் நிலையில், ஏன் அந்த நபர் அவரை சுட்டுக்கொன்றார் என்பது குறித்து இதுவரை எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை என்பது வருத்தத்திற்குரிய விடயம்தான்.