புடின் கடைசி வரை போராடி எப்படியும் ஜெயித்துவிடுவார்... பள்ளித்தோழர்கள் கூறும் தகவல்
புடின் தேவையில்லாமல் அடுத்தவர்களை வம்புக்கிழுப்பது இப்போது மட்டும் இல்லையாம், சிறுபையனாக இருக்கும்போதே அவர் அப்படித்தான் என ஒரு செய்தி வெளியாகியுள்ளது.
சிறுபையனாக இருக்கும்போதே பிரச்சினைகளை உருவாக்குபவர் என புடினை அவரது ஆசிரியர்களும், வகுப்புத் தோழர்களும் விமர்சித்துள்ளார்கள்.
புடின் பள்ளியில் படிக்கும்போதே பலரும் அவரைப் பார்த்து பயப்படுவார்களாம். யாராவது அவருடன் சண்டைக்கு வந்துவிட்டால் அவ்வளவுதானாம், கட்டுப்படுத்தமுடியாத அளவுக்கு வன்முறையில் இறங்கிவிடுவார் இளம் புடின் என்கிறார்கள் அவருடன் பள்ளியில் படித்த மாணவர்கள்.
யாருடன் வேண்டுமானாலும் சண்டைக்குப் போவார் புடின், அவருக்கு துளியும் பயம் என்பதே கிடையாது என்று கூறும் புடினுடைய சிறுவயது நெருங்கிய நண்பரான Viktor Borisenko, உயரமாக வாட்டசாட்டமாக இருக்கும் ஒருவர் சண்டைக்கு வந்தால் கூட, கொஞ்சமும் பயப்படாமல், அவர் மீது பாய்ந்து, அவரை நகத்தால் கீறி, கடித்து, அவரது தலையிலிருந்து ஒரு கொத்து முடியைப் பிடுங்கி எடுத்துவிடுவார் புடின் என்கிறார்.
புடின் எங்கள் வகுப்பிலேயே வலிமையானவர் கிடையாது, ஆனால், கடைசி வரை போராடி எப்படியும் ஜெயித்துவிடுவார் என்கிறார் Viktor.
அதனால்தான் இப்போதும் விடாமல் உக்ரைனுடன் போராடிக்கொண்டிருக்கிறாரோ என்னவோ!