கனடாவில் கொலை செய்யப்பட்ட இந்திய இளம்பெண்ணின் பெற்றோர் கண்ணீர்
தங்கள் மகளை கனடாவுக்கு அனுப்பியதற்காக வருந்துவதாக, கனடாவில் கொலை செய்யப்பட்ட இந்திய இளம்பெண் ஒருவரின் பெற்றோர் கண்ணீர் விட்டுக் கதறியுள்ளனர்.
கனடாவில் வாழ மகள் உதவுவாள் என நம்பி அனுப்பிய குடும்பம்
தங்கள் பிள்ளைகளை கனடாவுக்கு அனுப்பும் ஒரு பைத்தியக்காரத்தனம் இந்தியாவில் பலருக்கும் இருக்கிறது என்கிறார் கனடாவில் சுட்டுக்கொல்லப்பட்ட பவன்பிரீத் கௌர் (Pawanpreet Kaur, 21) என்னும் இளம்பெண்ணின் தந்தையான தேவிந்தர் சிங்.
பிள்ளைகளை முதலில் கனடாவுக்கு அனுப்பிவிட்டு, அவர்கள் மூலம் குடும்பமே கனடாவுக்கு செல்ல இது ஒரு வழி என மற்றவர்கள் நினைப்பதுபோலவே நாங்களும் நினைத்துவிட்டோம் என்கிறார் அவர்.
Photo provided by family
கடந்த சனிக்கிழமை இரவு, 10.40 மணியளவில், Mississauga நகரில் அமைந்துள்ள பெட்ரோல் நிலையம் ஒன்றில், இளம்பெண் ஒருவர் துப்பாக்கியால் சுடப்பட்டுக் கிடந்துள்ளார். உடலில் பல இடங்களில் குண்டுபாய்ந்து அவர் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த நிலையில், அவசர உதவிக்குழுவினர் அவரைக் காப்பாற்ற எடுத்த முயற்சிகள் பலனளிக்காமல், அவர் உயிரிழந்துள்ளார்.
பஞ்சாபைச் சேர்ந்த அந்த பெண் கனடாவில் Bramptonஇல் வாழ்ந்துவந்துள்ளார். அவரது பெயர் பவன்பிரீத் கௌர் என பொலிசார் தெரிவித்தனர். தற்போது அந்தப் பெண்ணின் புகைப்படங்களும் வெளியிடப்பட்டுள்ளன.
Photo provided by family
தலைமறைவாகியுள்ள குற்றவாளி
பவன்பிரீத்தை சுட்டுக்கொன்ற நபர், அங்கிருந்து கால்நடையாகவே தப்பிச் சென்றுள்ளார். பொலிசார் அவர் குறித்து வெளியிட்டுள்ள தகவலில், அடர் வண்ண ஆடை அணிந்த ஆண் என குறிப்பிடப்பட்டுள்ளது. இது தனிப்பட்ட விரோதம் காரணமான தாக்குதலாக இருக்கலாம் என பொலிசார் கருதுகிறார்கள்.
அந்த நபர் சிறிது நேரமாகவே அந்த பகுதியில் சைக்கிளில் சுற்றுவது CCTV கமெராவில் பதிவாகியுள்ள காட்சியிலிருந்து தெரியவந்துள்ள நிலையில், தற்போது அவர் பயணித்த சைக்கிள் சிக்கியுள்ளது.
Photo provided by family
இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து பொதுமக்கள் யாருக்காவது ஏதாவது தகவல் தெரிந்தாலோ, தங்கள் வீடுகள் அல்லது காரில் உள்ள கமெரா எதிலாவது இந்த சம்பவம் தொடர்பான காட்சிகள் ஏதாவது பதிவாகியிருந்தாலோ, தங்களுக்குத் தகவல் தெரிவிக்குமாறு பொலிசார் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.