உலக தமிழர்களிடம் பெரும் கொந்தளிப்பு! இலங்கைக்கு எதிராக வாக்காளிக்காமல் புறக்கணித்த பாஜக, அதிமுவை வீழ்த்த.. சீமான் காட்டம்
இலங்கைக்கு எதிராக வாக்களிக்காமல் வெளிநடப்பு செய்த இனவிரோத பாஜகவையும் அதனைத் தூக்கிச் சுமந்து வரும் அதிமுகவையும் தேர்தல் களத்தில் பழிதீர்த்து வீழ்த்துவோம் என சீமான் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஐ.நா.வின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் இனப்படுகொலைப் போர்க்குற்றங்கள் குறித்து விசாரிக்கக் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை, இந்திய நாடு ஆதரிக்காது வெளிநடப்புச் செய்திருப்பது பேரதிர்ச்சியளிக்கிறது.
தமிழர்களை இந்துக்கள் என்று பொய்யுரைத்துத் தமிழகத்தில் மத அரசியல் செய்து வாக்குவேட்டையாட முற்படும் பாஜக, தமிழர்கள் பக்கம் நிற்காது சிங்களர்கள் பக்கம் நின்று ஈழப்படுகொலையை மூடி மறைக்கத் துணைபோவது வன்மையான கண்டனத்திற்குரியது. பிரிட்டன், பிரான்ஸ், ஜேர்மனி உள்ளிட்ட தமிழர்களுக்குத் தொடர்பற்ற அந்நிய நாடுகள்கூட ஐ.நா. மனித உரிமை பேரவையில் முன்மொழியப்பட்ட தீர்மானத்தை ஆதரித்துள்ளன.
இலங்கைக்கு எதிராக வாக்களிக்காமல் வெளிநடப்பு செய்த இனவிரோத பாஜகவையும் அதனைத் தூக்கிச் சுமந்து வரும் அதிமுகவையும் தேர்தல் களத்தில் பழிதீர்த்து வீழ்த்தி முடிப்போம்!https://t.co/O7kP57WMNJ pic.twitter.com/JxSzLv6xMI
— சீமான் (@SeemanOfficial) March 26, 2021
இத்தீர்மானம் பன்னாட்டு விசாரணை கோராத வலுவற்ற தீர்மானமாக இருந்தபோதிலும், குறைந்தபட்சமாக அதனைக்கூட ஆதரிக்காது இந்திய அரசு வெளிநடப்புச் செய்திருப்பது உலகெங்கும் வாழும் தமிழர்களிடம் பெரும் கொந்தளிப்பையும், தீராத ஆத்திரத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.
மறைந்த அம்மையார் ஜெயலலிதா அவர்கள் இனப்படுகொலை நிகழ்த்திய இலங்கைப் பேரினவாத அரசு மீது பன்னாட்டு விசாரணை நடத்த வேண்டுமென்று தமிழகச் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினார்.
அவரது வழியில் செயல்படுவதாகக் கூறும் அதிமுக அரசு, இத்தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்கக் கூட்டணிக்கட்சியான பாஜகவை வலியுறுத்தி பேசாமல் கள்ள மௌனம் காத்ததும், பாஜக அரசின் சிங்கள ஆதரவுப்போக்கிற்குத் துணையாக நிற்பதும் தமிழர்கள் முதுகில் குத்தும் கொடுந்துரோகமாகும்.
இலங்கையைக் காப்பாற்றத் துணைபோனதில் பாஜக, அதிமுகவுக்கும் பங்குண்டு என்பதைத் தமிழ்ப்பேரினத்தின் மக்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்.
உலகத்தமிழினம் இவ்வரலாற்றுத் துரோகங்களை ஒருபோதும் மறக்காது; மன்னிக்காது.
ஆகவே, ஆயிரமாயிரம் ஆண்டுக் காலத்திற்கு மேலான இனப்பகை கொண்டு தமிழர்களை வஞ்சித்து முதுகில் குத்திய வரலாற்றுப்பகைவன் பாஜகவையும், அதனைத் தூக்கிச் சுமந்து வரும் இனவிரோத அதிமுகவையும் இத்தேர்தல் களத்தில் பழிதீர்த்து வீழ்த்தி முடிப்போமென எனச் சூளுரைக்கிறேன் என தெரிவித்துள்ளார்.