மூன்றாம் ஆண்டு திருமண நாளில் இந்தியாவுக்கு உதவ ஹரி மேகன் எடுத்துள்ள முடிவு
பிரித்தானிய இளவரசர் ஹரியும் அவரது மனைவி மேகனும், தங்கள் மூன்றாம் ஆண்டு திருமண நாளில், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவுக்கு உதவும் வகையில் ஒரு திட்டம் ஒன்றை முன்வைத்துள்ளார்கள்.
நேற்று தங்கள் மூன்றாம் ஆண்டு திருமண நாளைக் கொண்டாடிய இளவரசர் ஹரி மேகன் தம்பதியர், இந்தியாவில் ஒரு பேரிடர் நிவாரண மையம் அமைக்க திட்டமிட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்கள்.
மும்பையில் அமைக்கப்படவுள்ள அந்த மையத்திற்கான கட்டிடமானது, ஏற்கனவே ஹரி மேகன் தம்பதியரின் ஆர்ச்வெல் பவுண்டேஷன், கரீபியன் தீவான டொமினிக்கா தீவில் அமைத்துள்ள கட்டிடத்தின் மாதிரியின் அடிப்படையிலேயே கட்டப்பட உள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
அந்த மையம் உள்ளூர் மக்களுக்கு உணவு, மருத்துவ சேவை மற்றும் கொரோனா தடுப்பூசி ஆகியவற்றை இலவசமாக வழங்கும்.
அத்துடன், பைசர், மொடெர்னா, ஆஸ்ட்ராசெனகா மற்றும் ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியுள்ள ஹரி மேகன் தம்பதியர், உலகம் முழுமைக்கும் சமமாக தடுப்பூசி விநியோகம் செய்வதை உறுதி செய்யுமாறு அவர்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.