காதலன் குடும்பத்தால் ரத்தான திருமணம்: இளம் மருத்துவர் எடுத்த முடிவு
இந்திய மாநிலம் கேரளாவில் காதலன் குடும்பத்தினர் கோரிய வரதட்சணையை பூர்த்தி செய்ய முடியாமல் போக, இளம் மருத்துவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
காதலன் மீது பொலிசார் வழக்கு
கேரளாவின் திருவனந்தபுரம் மாவட்டத்தில் வரதட்சணை காரணமாக காதலன் திருமணத்திற்கு மறுப்பு தெரிவிக்க, 26 வயதேயான மருத்துவர் சஹானா தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
Credit: mathrubhumi
மருத்துவர் சஹானா மரணம் குறித்து விசாரணை நடத்த அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து தற்கொலைக்கு தூண்டுதல் மற்றும் வரதட்சணை தடுப்பு சட்டத்தின் கீழ் காதலன் மீது பொலிசார் வழக்கு பதிவு செய்து, கைது செய்யப்பட்டுள்ளார்.
உள்ளூர் பத்திரிகைகளில் வெளியான தகவலின் அடிப்படையில், மருத்துவர் சஹானா தமது தாயார் மற்றும் இரு சகோதரர்களுடன் வசித்து வந்துள்ளார். வளைகுடா நாடு ஒன்றில் பணியாற்றி வந்த சஹானாவின் தந்தை இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் மரணமடைந்துள்ளார்.
சஹானாவும் மருத்துவர் ருவைஸ் என்பவரும் காதலித்து வந்த நிலையில், இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளனர். இந்த நிலையில், ருவாயிஸின் குடும்பத்தினர் வரதட்சணையாக 150 சவரன் தங்க நகைகள், 15 ஏக்கர் நிலம் மற்றும் பிஎம்டபிள்யூ கார் ஒன்றும் கேட்டுள்ளனர்.
பணம் மட்டுமே எல்லோருக்கும் தேவை
ஆனால் அவர்களின் இந்த தேவையை சஹானா குடும்பத்தினரால் பூர்த்தி செய்ய முடியாமல் போயுள்ளது. இதனையடுத்து, ருவைஸ் குடும்பத்தினர் திருமணத்தை ரத்து செய்துள்ளனர்.
Credit: businesstoday
காதலன் வீட்டாரின் இந்த முடிவு மருத்துவர் சஹானாவை கடுமையாக பாதித்துள்ளது. இதனையடுத்தே அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அவரது குடியிருப்பில் இருந்து சிக்கிய கடிதம் ஒன்றில், பணம் மட்டுமே எல்லோருக்கும் தேவை என குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, மருத்துவர் ருவைஸ் குடும்பத்தினர் முன்வைத்த வரதட்சணை குறித்த முழு தகவல்களையும் திரட்ட உரிய அதிகாரிகளுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |