வெஸ்ட் பேங்க் பகுதியில் இஸ்ரேல் துப்பாக்கிச்சூடு: கொல்லப்பட்ட 10 வயது சிறுவன்
வெஸ்ட் பேங்க் பகுதியில் இஸ்ரேலிய படைகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 10 வயது சிறுவன் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரேலிய படைகள் துப்பாக்கிச் சூடு
பாலஸ்தீனத்தின் வெஸ்ட் பேங்க் பகுதியில் ஹெப்ரோனுக்குத் தெற்கே அல்-ரிஹியா கிராமத்தில் இஸ்ரேலிய படைகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 10 வயதுடைய முகமது அல்-ஹல்லாக் என்ற பாலஸ்தீன சிறுவன் உயிரிழந்தான்.
சம்பந்தப்பட்ட பகுதியில் வியாழக்கிழமை நடந்த மோதலின் போது இஸ்ரேலிய படைகள் மீது கற்கள் வீசப்பட்டதாகவும் அதற்கு பதிலடியாக இஸ்ரேலிய வீரர்கள் துப்பாக்கி சூடு நடத்தியதாகவும் இஸ்ரேலிய ராணுவம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட சிறுவன் முகமது அல்-ஹல்லாக்கின் இடுப்பில் குண்டு பாய்ந்ததில், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
குற்றம் சாட்டிய கிராம மக்கள்
இஸ்ரேலிய இராணுவத்தின் அறிக்கைக்கு மாறுபட்ட கருத்தை அப்பகுதி கிராம மக்கள் தெரிவித்துள்ளனர், அதில் சிறுவர்கள் உள்ளூர் பள்ளி மைதானத்தில் விளையாடி கொண்டிருந்ததாகவும், இஸ்ரேலிய ராணுவ வீரர்களின் வருகை தொடர்ந்து சிறுவர்கள் பயந்து ஓடியதாகவும் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் இஸ்ரேலிய வீரர்கள் பின்பக்கத்திலிருந்து முறையற்ற வகையில் துப்பாக்கி சூடு நடத்தியதாகவும் குற்றம் சாட்டினர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |