இறந்தாலும் உயிருடன் வரக்கூடிய வினோதமான உயிரினம் எது தெரியுமா?
பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும் ஜெல்லி மீன்களின் குறிப்பிட்ட சில இனங்களுக்கு மட்டும் இறப்பு என்பதே கிடையாது.
இதற்கான சிறப்பு என்னவென்றால் இது தன்னுடைய வாழ்நாளை மாற்றியமைக்கும் தன்மை பெற்ற உயிரினம்.
அதாவது உயிர் போகும் கடைசி நிமிடத்தில் இது தனது வாழ்நாளை மாற்றியமைத்து மீண்டும் இளமையாக மாறி இறக்காமல் தனது வாழ்வைத் தொடரும் ஓர் உயிரினம்.
ஜெல்லி மீன்களில் பல வகையான சிற்றினங்கள் உள்ளன. அவற்றில் Turritopsis dohrnii என்னும் இன ஜெல்லி மீன்கள் அழிவில்லாதது. இந்த இனத்தின் மெடுசா நிலையில் இருக்கும் ஜெல்லி மீன் ஏதேனும் காரணங்களால் இறந்து விட்டால் அது அப்படியே மூழ்கி கடலின் ஆழத்திற்கு சென்று அதன் குடை பகுதியும் உணர் கொம்புகளும் அழுக ஆரம்பிக்கும்.
ஆச்சர்யபடும் விதமாக அதன் செல்கள் சேர்ந்து (புதிய மெடுசா நிலைக்கு மாறாமல்) பாலிப் நிலைக்கு மாறிவிடும். பின்பு மறுபடியும் ஏதேனும் ஒரு இடத்தில் நன்கு பற்றிக்கொண்டு வளர்ந்து புது ஜெல்லி மீனாக உருவாகும். இது போல் இந்த வகை ஜெல்லி மீன்களால் மீண்டும் மீண்டும் செய்ய முடியும்.
இந்த முறைக்கு Cellular Transdifferentiation என்று பெயர். அதாவது பாலியல் முதிர்வு நிலைக்கு அடைந்த பிறகும் இதன் மரபணு மூலம் அவற்றால் முந்தைய உயிர் நிலைக்கு மாற முடியும்.
இது போன்ற இறப்பில்லா பண்பு ஜெல்லி மீன்களுக்கு கிடைத்த ஒரு பெரிய வரம் தான். ஏனெனில் நோயினாலோ அல்லது வேறு ஏதேனும் ஆபத்தாலோ இவற்றின் நிலை மோசமானால் கூட அவை மீண்டும் உயிர் பெற்றுவிட முடியும்.