உக்ரைன் மீதான ரஷ்ய போர் குறித்த சீனாவின் நிலை என்ன?: சீன அதிபர் தெரிவித்துள்ள கருத்து
ஐரோப்பாவில் போரின் பிழம்புகள் மீண்டும் பற்றவைக்கப்பட்டுள்ளதைக் காண தனக்கு வேதனையாக உள்ளது என்று கூறியுள்ளார் சீன அதிபர் ஸி ஜின்பிங்.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் மற்றும் ஜேர்மன் சேன்ஸலர் Olaf Scholz ஆகியோருடன் காணொலிக்காட்சி மூலம் சந்திப்பு ஒன்றில் பங்கேற்ற சீன அதிபர் ஸி ஜின்பிங், சூழ்நிலை ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தியுள்ளதாகவும், தங்கள் மூன்று நாடுகளும் சமாதானப் பேச்சுவார்த்தைகளை ஆதரிக்கவேண்டும் என்றும் கூறியுள்ளார்.
சீன அதிபர் ஸி ஜின்பிங்கின் இந்த வார்த்தைகள், உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளதை தாங்கள் ஆதரிக்கவில்லை என்பதை சொல்லாமல் சொல்வதுபோல உள்ளதாக கருதப்படுகிறது.
அதே நேரத்தில், ஐக்கிய நாடுகள் சபையில் ரஷ்யாவின் செயல்களைக் கண்டிக்கும் வாக்கெடுப்பில் சீனா கலந்துகொள்ளவில்லை. ஊடுருவல் என்ற பதத்தைப் பயன்படுத்தவும் சீனா மறுத்தது.
ஆனால், வெளிப்படையாக புடினுடைய அரக்கத்தனத்தை சீனா கண்டிக்கவில்லையென்றாலும், சீனா இந்தப் போரை விமர்சிப்பதாகவே கருதப்படுகிறது.
இந்நிலையில், உக்ரைனுக்கு மனிதநேய உதவிகள் அனுப்ப இருப்பதாக தெரிவித்துள்ள சீனா, இந்த போரால் உலகின் மீது ஏற்பட இருக்கும் தாக்கத்தைக் குறைக்க உதவுமாறு பிரான்சையும் ஜேர்மனியையும் கேட்டுக்கொண்டுள்ளது.
ரஷ்யாவின் நெருங்கிய கூட்டாளியான சீனா, தனது நட்பைக் காட்டும் வகையில், விதிக்கப்படும் தடைகள், உலகின் மீது ஏற்படுத்தவிருக்கும் தாக்கம் குறித்தும் கவலை தெரிவித்துள்ளது.
உலகப் பொருளாதாரம், ஆற்றல் மூலங்கள், போக்குவரத்து மற்றும் பொருட்கள் விநியோகம் ஆகியவை மீதான தடைகளால் ஏற்படவிருக்கும் தாக்கம் குறித்துப் பார்க்கும்போது, பெருந்தொற்றால் ஏற்கனவே உலகப் பொருளாதாரம் கடும் சுமைக்குள்ளாகியுள்ள நிலையில், இந்த தடைகளும் அனைவருக்கும் தீங்கை ஏற்படுத்தக்கூடியதாகவே உள்ளது என்றார் சீன அதிபர் ஸி ஜின்பிங்.