இந்தியாவை உடைப்போம் என கோஷம்; மீண்டும் வெடித்த வன்முறை - வங்கதேசத்தில் நடப்பது என்ன?
வங்கதேசத்தில் இந்தியாவிற்கு எதிராக கோஷங்களும், மீண்டும் வன்முறையும் வெடித்துள்ளது.
வங்கதேசத்தில் தேர்தல்
வங்கதேசத்தில் கடந்த ஆண்டு ராணுவத்தில் உள்ள இட ஒதுக்கீட்டுக்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்ததில் ஆட்சி கவிழ்ந்ததில் ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்ந்தது.

வங்கதேச இடைக்கால அரசின் பிரதமர் முகமது யூனுஸ் தலைமையில், ஆட்சி நடைபெற்று வருகிறது.
இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள ஷேக் ஹசீனா மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வழக்கு நடைபெற்று வந்தது.
சமீபத்தில் இந்த வழக்கில் ஷேக் ஹசீனாவிற்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. ஆனால், தற்போது வரை ஷேக் ஹசீனா நாடு கடத்தப்படாமல் இந்தியாவிலே இருந்து வருகிறார்.
வங்கதேசத்தில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது.
இந்தியாவிற்கு எதிராக கோஷம்
வங்கதேசத்தில் இந்தியாவிற்கு எதிரான கோஷங்கள் அதிகரித்து வருகிறது.
டிசம்பர் 15 ஆம் திகதி பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய தேசிய குடிமக்கள் கட்சி தலைவர் ஹஸ்னத் அப்துல்லா, "இந்தியா பிரிவினைவாத சக்திகளுக்கு தங்குமிடம் அளித்தால், வங்கதேசமும் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களை பிரிக்கும்" என பேசினார்.

இதனால் கவலையடைந்த இந்திய அரசு, டெல்லியில் உள்ள வங்கதேச உயர் ஆணையரை இந்திய வெளியுறவுத் துறை நேரில் அழைத்து விளக்கம் கேட்டது.
இதற்கு ஆட்சேபனை தெரிவித்த ஹஸ்னத் அப்துல்லா, "ஷேக் ஹசீனாவுக்கு இந்தியா அடைக்கலம் அளித்து வருவதால், இந்திய உயர் ஆணையரை நமது நாட்டை விட்டு வெளியேற்றி இருக்க வேண்டும்" என பேசினார்.
மேலும், டாக்காவில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகம் நோக்கி சில அமைப்புகள் பேரணி நடத்த முயன்றது.

இதனையடுத்து, வங்கதேசத்தில் உள்ள 3 விசா மையங்களை இந்தியா மூடியது. வங்கதேசத்தில் மீண்டும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் வன்முறை வெடித்துள்ளது.
ஷெரீப் உஸ்மான் ஹாதி உயிரிழப்பு
கடந்த ஆண்டு ஆட்சி கவிழ்ப்பிற்கு காரணமான போராட்டத்தில் "இன்கிலாப் மோன்சோ"( Inqilab Moncho) அமைப்பு முக்கிய வகித்தது.

இந்த அமைப்பின் தலைவரான 32 வயதான ஷெரீப் உஸ்மான் ஹாதி(sharif osman hadi), கடந்த டிசம்பர் 12 ஆம் திகதி, டாக்காவில் உள்ள ஒரு மசூதியிலிருந்து வெளியேறியபோது முகமூடி அணிந்த நபர்களால் சுடப்பட்டார்.
சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று வந்த அவர், கடந்த டிசம்பர் 18 ஆம் திகதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
நடைபெற உள்ள பொதுத்தேர்தலில் அவர் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட திட்டமிட்டிருந்த நிலையில், தேர்தல் அறிவிப்பு வெளியான மறுநாள் அவர் சுடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அவரது மரண செய்தி வெளியானதும் ஆதரவாளர்கள் டாக்காவில் உள்ள சதுக்கத்தில் போராட்டத்தில் இறங்கினர்.
ஹிந்து இளைஞர் அடித்து கொலை இதனையடுத்து, போராட்டக்காரர்கள் வங்கதேசத்தின் முக்கிய நாளிதழ்களான 'தி டெய்லி ஸ்டார்' (The Daily Star), 'புரோதோம் ஆலோ' (Prothom Alo) ஆகிய அலுவலகங்களுக்கு தீ வைத்து சேதப்படுத்தினர்.
மேலும், சட்டகிராம் (Chattogram) நகரில் உள்ள இந்தியத் துணை உயர் ஆணையரின் இல்லம் மற்றும் இந்திய துணை தூதரகம் மீதும் கற்கள் வீசித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
உடனாடியாக விரைந்த காவல்துறையினர், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் கூட்டத்தை கலைத்தனர்.

இதனையடுத்து, மைமென்சிங் மாவட்டத்தின் பல்லூகா உபஜிலா, துபாலியா பரா பகுதியில் ஜவுளி கடை ஒன்றில் பணியாற்றிய தீபு சந்திர தாஸ் என்பவர் முகமது நபி குறித்து அவதூறாக பேசியதாக கூறி அடித்து கொல்லப்பட்டார். மேலும், அவரை மரத்தில் கட்டி வைத்து தீ வைத்துள்ளனர்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |