மியான்மரில் என்ன நடக்கிறது? முதல்முறையாக ராணுவம் விளக்கம்
பொதுத் தேர்தலில் நடந்த முறைகேடு காரணமாகவே ஆட்சி கவிழ்க்கப்பட்டுத் தங்கள் கட்டுப்பாடுக்குள் அரசு வந்துள்ளதாக மியான்மர் ராணுவம் விளக்கமளித்துள்ளது.
கடந்த நவம்பரில் நடந்த தேர்தலில் ஆங் சான் சூகி தலைமையிலான ஜனநாயகக் கட்சி பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றியது.
இத்தேர்தலை மியான்மர் ராணுவம் தொடர்ந்து விமர்சித்து வந்த நிலையில் தற்போது ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.
தேர்தலில் நடந்த முறைகேடு காரணமாகவே, இவ்வாறான நடவடிக்கைக்கு தாங்கள் நிர்பந்திக்கப்பட்டதாக ராணுவம் விளக்கம் அளித்துள்ளது.
மியான்மர் ராணுவத்தின் இந்த நடவடிக்கையை அமெரிக்கா, அவுஸ்திரேலியா, பிரித்தானியா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் கண்டித்துள்ளன. மேலும், சட்டத்தை மதித்து நடக்கும்படியும் வலியுறுத்தியுள்ளன.
இதனிடையே, சர்வதேச ஊடகங்கள் தரப்பில், மியான்மர் அரசை திங்கட்கிழமையன்று அந்நாட்டு ராணுவம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது எனவும், அந்நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில் அடைக்கப்பட்டுள்ளார் எனவும் தெரிவித்துள்ளன.
மேலும், தலைநகரிலிருந்து தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. அவசர நிலையையும் ராணுவம் அங்கு அமல்படுத்தியுள்ளது.
ஒரு வருடத்திற்கு ராணுவக் கட்டுப்பாட்டில் மியான்மர் இருக்கும் எனவும், சமீபத்தில் நடந்த தேர்தல் முறைகேடு காரணமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1962 முதல் 50 ஆண்டுகளுக்கும் மேலாக மியான்மரில் ராணுவ ஆட்சி நடைபெற்று வந்தது.
இதை எதிர்த்து தேசிய ஜனநாயகக் கட்சியின் தலைவர் ஆங் சான் சூகி சுதந்திரப் போராட்டத்தை வழிநடத்தினார். சுமார் 21 ஆண்டுகள் அவர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.
மக்களின் போராட்டம் காரணமாக கடந்த 2015-ல் அங்கு பொதுத்தேர்தல் நடைபெற்றது. இதில் ஆங் சான் சூகியின் கட்சி அமோக வெற்றி பெற்றது.
அவரின் மகன்கள் வெளிநாட்டுக் குடியுரிமை பெற்றிருப்பதால் அவரால் ஜனாதிபதி பதவியேற்க முடியவில்லை.
இதைத் தொடர்ந்து சூகிக்கு நெருக்கமான டின் கியாவ் (71) ஜனாதிபதியாக பதவியேற்றார். மட்டுமின்றி, நாட்டின் தலைமை ஆலோசகராக ஆங் சான் சூகி பொறுப்பேற்றார்.