கடற்கரையில் புகுந்து மர்ம நபர்கள் சரமாரி துப்பாக்கிச் சூடு.. சிதறி ஓடிய மக்கள்: இரத்தவெள்ளத்தில் பலர்
அமரிக்காவில் வர்ஜீனியா கடற்கரையில் திடீரென்று புகுந்த துப்பாக்கிதாரிகள் சரமாரியாக சுட்டதில் இருவர் கொல்லப்பட்டதுடன் பலர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உள்ளூர் நேரப்படி இரவு 11.30 மணியளவில் நடந்த இந்த கண்மூடித்தனமாக தாக்குதலை அடுத்து, குறித்த பகுதிக்கு பொதுமக்கள் யாரும் செல்ல வேண்டாம் என பொலிசார் அறிவுறுத்தியுள்ளனர்.
வர்ஜீனியா கடற்கரை பொலிசார் வெளியிட்ட தகவலின்படி பொதுமக்களில் 9 பேர்கள் துப்பாக்கி குண்டுக்கு இலக்கானதாகவும், காயங்களுடன் அவர்கள் தப்பியதாகவும் தெரிய வந்துள்ளது.
இதனிடையே, துப்பாக்கி குண்டு பாய்ந்ததில் இருவர் கொல்லப்பட்டதாகவும் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். பல முறை துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளது என குறிப்பிட்ட பொலிஸ் அதிகாரிகள், நடந்த சம்பவம் தொடர்பில் விசாரணை முன்னெடுத்து வருவதாக தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச் சூடு சம்பவத்தை அடுத்து பலர் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், தாக்குதல் நடந்த பகுதியில் திரளான பொலிசார் குவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
வர்ஜீனியா கடற்கரையில் அமைந்துள்ள பொது மருத்துவமனையில் துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில் 6 நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த தாக்குதலை முன்னெடுத்தவர்கள் யார் என்பதும், இதன் நோக்கம் என்ன என்பது தொடர்பிலும் பொலிசார் விசாரணை முன்னெடுத்து வருகின்றனர்.
பலருக்கும் ஆழமான காயம் என்பதால், இறப்பு எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.