ஜேர்மனியின் புதிய குடியுரிமை சட்டத்தின்படி குடியுரிமைக்கு விண்ணப்பிக்க என்னென்ன ஆவணங்கள் தேவை?
ஜேர்மனியின் புதிய குடியுரிமைச் சட்டம், இந்த ஆண்டு, அதாவது, 2024ஆம் ஆண்டு, ஜூன் மாதம் 27ஆம் திகதி அமுலுக்கு வந்தது.
புதிய சட்டத்தின்படி, குடியுரிமைக்கு விண்ணப்பிக்க என்னென்ன ஆவணங்கள் தேவை என இந்த செய்தியில் பார்க்கலாம்.
1. சட்டப்படி ஜேர்மனியில் வாழ்ந்ததற்கான ஆதாரம்
ஜேர்மன் குடியுரிமைக்கு விண்ணப்பிப்பதற்கு எட்டு ஆண்டுகள் ஜேர்மனியில் வாழ்ந்திருக்கவேண்டும் என்பது மாற்றப்பட்டு, இனி ஐந்து ஆண்டுகள் சட்டப்பூர்வமாக ஜேர்மனியில் வாழ்ந்த வெளிநாட்டவர்கள் குடியுரிமைக்கு விண்ணப்பிக்க முடியும் என்கிறது புதிய சட்டம்.
ஆக, குடியுரிமைக்கு விண்ணப்பிப்போர் தாங்கள் ஐந்து ஆண்டுகள் ஜேர்மனியில் வாழ்ந்ததற்கான ஜேர்மன் குடியிருப்பு அனுமதியை சமர்ப்பிக்கவேண்டும்.
கல்வியில் அல்லது தொழிலில் சிறந்து விளங்குதல், பொது வாழ்வில் ஈடுபடுதல் அல்லது அரசியலில் பங்கேற்றல் போன்ற சிறப்பு தகுதிகளையுடையோர், மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு குடியுரிமை பெற விண்ணப்பிக்கலாம்.
2. ஜேர்மன் மொழித்திறனுக்கான ஆதாரம்
நீங்கள் B1 மட்டத்தில் ஜேர்மன் மொழி பேசத்தெரிந்தவர் என்பதற்கான ஆதாரத்தை சமர்ப்பிக்கவேண்டும்.
இதுபோக, fast-track முறையில் குடியுரிமைக்கு விண்ணப்பிப்போர் C1 மட்டத்தில் மொழித்தேர்வில் வெற்றி பெற்றதற்கான ஆதாரத்தை சமர்ப்பிக்கவேண்டும்.
67 வயதுக்கு மேற்பட்டவர்கள் மொழித்தேர்வில் பங்கேற்கும்போது, இனி அவர்கள் எழுத்துத் தேர்வில் பங்கேற்கவேண்டியிருக்காது. அவர்களால் ஜேர்மன் மொழி பேசமுடிந்தால் போதும், ஜேர்மன் குடியுரிமை பெறலாம்.
3. ஜேர்மன் குடியுரிமைத் தேர்வில் வெற்றி
ஜேர்மன் வரலாற்றில் நிகழ்ந்த இன்றியமையாத நிகழ்ச்சிகளான இரண்டாம் உலகப்போர், ஜேர்மன் குடியரசு போன்ற விடயங்கள் குறித்தும், புவியியல் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் குறித்தும் அந்தத் தேர்வில் கேள்விகள் கொண்ட ஜேர்மன் குடியுரிமைத் தேர்வில் நீங்கல் வெற்றி பெற்றிருக்கவேண்டும்.
ஜேர்மன் மொழியில் வடிவமைக்கப்பட்டுள்ள அந்தத் தேர்வில் 33 கேள்விகள் கேட்கப்பட்டிருக்கும். 30 கேள்விகள் ஜேர்மனி குறித்த பொதுவான கேள்விகளாகவும், மூன்று கேள்விகள் நீங்கள் வாழும் மாகாணம் குறித்த கேள்விகளாகவும் இருக்கும்.
4. உங்கள் தேவைகளை நீங்களே சந்தித்துக்கொள்ளவேண்டும்
புதிய குடியுரிமைச் சட்டத்தின்படி, நீங்கள் உங்கல் பனத்தேவைகளை நீங்களே சந்தித்துக்கொள்ளவேண்டும்.
ஆகவே, நீங்கள் அரசின் நிதி உதவி எதையும் பெறவில்லை என்பதற்கான ஆதாரத்தை சமர்ப்பிக்கவேண்டும்.
5. குற்றப்பின்னணி இல்லை என்பதை நிரூபிக்கவேண்டும்
ஜேர்மன் குடியுரிமைக்கு விண்ணப்பிப்போர் குற்றப்பின்னணி கொண்டவர்களாக இருக்கக்கூடாது.
அத்துடன், அவர்கள் இனவெறுப்பு குற்றத்தில் ஈடுபடாதவர்களாகவும் ஜேர்மன் சமூகத்தின் அடிப்படை சட்ட திட்டங்களுக்கு தங்களை அர்ப்பணிப்பவர்களாகவும் இருக்கவேண்டும்.
6. படிவங்கள், ஆவணங்கள் மற்றும் கட்டணங்கள்
மேற்குறிப்பிட்ட விடயங்களுடன், நீங்கள் உங்கள் விண்ணப்பப்படிவத்தை நிரப்புவதுடன், பாஸ்போர்ட்டுக்கான விண்ணப்பம், அதற்காக உங்கள் புகைப்படம், பிறப்புச் சான்றிதழின் நகல்கள், அதன் மொழிபெயர்ப்பு, திருமணம் ஆனவர்கள் தங்கள் திருமணச் சான்றிதழ் ஆகியவற்றை சமர்ப்பிக்கவேண்டும்.
இறுதியாக, ஜேர்மன் குடியுரிமைக்கு விண்ணப்பிப்பதற்கான கட்டணமாக பெரியவர்களுக்கு 255 யூரோக்களும், பிள்ளைகளுக்கு ஆளுக்கு 51 யூரோக்களும் கட்டணம் செலுத்தவேண்டும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |