வெளிநாடுகளில் இருக்கும் போது பாஸ்போர்ட் தொலைந்தால் என்ன செய்ய வேண்டும்?
வெளிநாடுகளில் இருக்கும் போது பாஸ்போர்ட் தொலைந்து விட்டால் என்ன செய்வது என பார்க்கலாம்.
வெளிநாட்டு பயணம்
கல்வி மற்றும் வேலைக்காக வெளிநாடுகளுக்கு செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சிலர் சுற்றுலாவிற்காக கூட வெளிநாடுகளுக்கு செல்வது உண்டு.
வெளிநாட்டு பயணத்திற்கு மிக முக்கியமான ஒன்று பாஸ்போர்ட் ஆகும். பாஸ்போர்ட் இல்லாமல் வெளிநாடு செல்லவோ வெளிநாட்டில் இருந்து சொந்த நாட்டிற்கு திரும்பவோ முடியாது.
ஒருவேளை வெளிநாட்டில் இருக்கும் போது பாஸ்போர்ட் தொலைந்து விட்டாலோ அல்லது பயன்படுத்த முடியாத அளவுக்கு சேதமடைந்து விட்டாலோ என்ன செய்வது என்பது குறித்து பார்க்கலாம்.
பாஸ்போர்ட் தொலைந்தால்...
பாஸ்போர்ட் தொலைந்து விட்டால், முதலில் அருகில் உள்ள காவல் நிலையம் சென்று பாஸ்போர்ட் தொலைந்து விட்டதாக புகார் அளித்து, புகார் அளித்ததற்கான சான்றிதழை பெற வேண்டும்.
அதன் பின்னர், காவல் நிலையத்தில் புகார் அளித்ததற்கான சான்றிதழுடன், அந்த நாட்டில் உள்ள தூதரகத்திற்கு சென்று பாஸ்போர்ட் தொலைந்த தகவலை தெரிவிக்க வேண்டும்.
அங்குள்ள தூதரகத்திற்கு உங்களின் நிலைமைக்கு ஏற்ப அடுத்த கட்ட நடவடிக்கைகளை பரிந்துரைப்பார்கள். தூதரகத்தில், நீங்கள் ஒரு புதிய பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கலாம் அல்லது அவசரச் சான்றிதழைக் கோரலாம்.
அவசரச் சான்றிதழ் என்பது, புதிய பாஸ்போர்ட்டுக்கு நீண்ட காலம் காத்திருக்காமல், நாடு திரும்ப அனுமதிக்கும் தற்காலிக பயண ஆவணமாகும். அதனை பெறுவதற்கு தேவையான ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
சில நாடுகளில் விசா இல்லாத நுழைவுக்கு அனுமதிக்கப்பட்டாலும், பெரும்பாலான நாடுகளுக்கு செல்ல விசா தேவைப்படுகிறது. உங்களுடைய பாஸ்போர்ட்டில் விசா முத்திரையிடப்பட்டிருந்தால், அந்தந்த தூதரகத்தில் இருந்து விசாவை மீண்டும் பெற விண்ணப்பிக்க வேண்டும்.
காவல்நிலையத்தில் புகார் அளித்த சான்றிதழ் மற்றும் உங்கள் தொலைந்த விசா தொடர்பான எந்த ஆவணங்களையும் எடுத்துச் செல்வது அவசியம்.
விமான டிக்கெட்
பாஸ்போர்ட் இல்லாமல் நாடு திரும்புவது இயலாத காரியம் என்பதால், நீங்கள் பயணத்திற்கு விமான டிக்கெட் முன்பதிவு செய்திருந்தால், விமான நிறுவனத்தை தொடர்பு கொண்டு, பயண தேதியை மாற்றி தருமாறு கோரிக்கை வைக்கலாம்.
பெரும்பாலான விமான சேவை நிறுவனங்கள் பயண தேதியை மாற்றம் செய்கின்றன.
நீங்கள் உங்கள் சர்வதேச பயணத்திற்கு காப்பீடு செய்திருந்தால், உங்கள் காப்பீடு வழங்குநரை தொடர்பு கொண்டு, காவல்துறை அறிக்கை மற்றும் விமான டிக்கெட் தேதி மாற்றம் மற்றும் விசா கட்டணம் என அனைத்து ரசீதுகளையம் வைத்து ஏற்பட்ட செலவை மீட்டெடுக்கலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |