நாடு தழுவிய போர் ஒத்திகை; எந்த பகுதிகளில் நடைபெறும்? என்ன பயிற்சிகள் மேற்கொள்ளப்படும்?
காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டதையடுத்து, இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது.
போர் ஒத்திகை
இந்நிலையில், மே 7 ஆம் திகதியன்று நாடு தழுவிய அளவில் போர் ஒத்திகை மேற்கொள்ள மாநில அரசுகளுக்கு இந்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
இதன்படி, இந்தியாவில் 244 மாவட்டங்களில் இந்த போர் ஒத்திகை நடைபெற உள்ளது. முன்னதாக 1971 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியா பாகிஸ்தான் போருக்கு பிறகு, முதல்முறையாக நாடு தழுவிய இத்தகைய பாதுகாப்பு ஒத்திகை இந்தியாவில் நடைபெற உள்ளது.
தமிழ்நாட்டில் சிவில் பாதுகாப்பு மாவட்டங்களாக உள்ள சென்னை மற்றும் கல்பாக்கம் பகுதிகளில் தான் இந்த பாதுகாப்பு ஒத்திகைகள் நடைபெற உள்ளன.
இந்த ஒத்திகையின் போது, போர் நடக்கும்போது பாதுகாப்பு படையினர், பொது மக்கள் என்ன செய்ய வேண்டும், என்ன செய்ய கூடாது என்று பயிற்சி அளிக்கப்படும்.
இதனிடையே தேசிய பாதுகாப்பு ஆலோசகர், முப்படைகளின் தலைமை தளபதிகள் உள்ளிட்டோருடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தியுள்ளார்.
என்ன சோதனைகள் நடைபெறும்?
வான்வழி தாக்குதல் நடத்தக்கூடிய வாய்ப்புள்ள பகுதிகளில் ஏர் சைரன்கள் ஒலிக்கப்படும். இந்த நேரத்தில் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைவது, தற்கொள்வது உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்படும்.
இந்த ஏர் சைரன்கள் சரியாக இயங்குகிறதா என மாநில அரசுகள் பரிசோதிக்கும். கட்டுப்பாட்டு அறை மற்றும் நிழல் கட்டுப்பாட்டு அறையின் செயல்பாடு மதிப்பீடு செய்யப்படும்.
இரவு நேரத்தில் எதிரி நாட்டு விமானங்கள் தாக்குதலில் ஈடுபட வரும் போது, ஒட்டுமொத்தமாக நகரில் மின்விளக்குகளை அணைப்பது, அந்த நேரத்தில் எப்படி செயல்படுவது என்பது குறித்த பயிற்சி அளிக்கப்படும்.
மின்உற்பத்தி நிலையங்கள், விமான நிலையங்கள், ஆயுத கிடங்குகள் போன்ற முக்கிய பகுதிகளை எதிரிகளின் செயற்கைக்கோள் அல்லது வான்வழி கண்காணிப்பின் போது அடையாளம் காண முடியாத வகையில், விரைவாக மறைக்கும், மறைப்பு பயிற்சிகள் (Camouflage Exercises) நடைபெறும்.
தாக்குதல் நடத்தப்பட்டால், அந்த பகுதி மக்களை பாதுகாப்பாக வெளியேற்றுவது, அடிப்படை முதலுதவி சிகிச்சை வழங்குவது, இணையம், மின்சாரம் துண்டிக்கப்பட்டால் எவ்வாறு செயல்படுவது என்பது குறித்த பயிற்சிகள் அளிக்கப்படும்.
தீயணைப்பு துறையினர், பேரிடர் மீட்பு படையினர் மற்றும் இதர பாதுகாப்பு சேவைகள் சரியாக செயல்படுகிறதா? ஓரிடத்திலிருந்து அவசரமாக மக்களை வெளியேற்ற வேண்டும் எனில் அது சரியாக திட்டமிட்டபடி செய்யப்படுகிறதா? என சோதனை செய்து பார்க்கப்படும்.
இந்தப் பயிற்சியில், மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள சிவில் பாதுகாப்பு இயக்குநரகத்துடன் தொடர்புடைய சுமார் 4 லட்சம் தன்னார்வலர்கள் ஈடுபடுவார்கள் என கூறப்படுகிறது.