வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்ல ஆவலுடன் காத்திருக்கும் சுவிஸ் குடிமக்களின் ஆசை எப்போது நிறைவேறும்?
கோடை என்றாலே நாடு நாடாக சுற்றுலா செல்பவர்களை வீட்டுக்குள்ளேயே அடைத்துப் போட்டால் எப்படி இருக்கும்? எப்போது இந்த கொரோனா தீரும், கட்டுப்பாடுகள் எப்போது நெகிழ்த்தப்படும், எப்போது சுற்றுலா செல்வோம் என்ற ஏக்கம் இருந்துகொண்டே இருக்கும் அல்லவா?
அவ்வகையில், சுவிஸ் குடிமக்கள் இந்த கோடை விடுமுறையில் சுற்றுலா செல்வதற்கான வாய்ப்புகள் உள்ளதா, அப்படியென்றால், தங்களுக்கு பிடித்தமான நாடுகளில் எந்தெந்த நாடுகளுக்குச் சுற்றுலா செல்லலாம் என்பது போன்ற கேள்விகளுக்கு விடையளிக்க முயல்கிறது இந்த செய்தி...
இத்தாலி
இத்தாலியைப் பொருத்தவரை, சுவிஸ் மக்கள் பாரம்பரியமாக சுற்றுலா செல்லும் ஒரு நாடாகும் அது.
ஐரோப்பிய ஒன்றியத்தால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் பெற்றுக்கொண்டவர்கள், கொரோனாவிலிருந்து விடுபட்டவர்கள் மற்றும் பயணம் புறப்படுவதற்கு 48 மணி நேரம் முன்பு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில் தங்களுக்கு கொரோனா இல்லை என்பதற்கான ஆதாரம் வைத்திருப்பவர்கள் ஆகியோர் எவ்வித கட்டுப்பாடுகளுமின்றி இத்தாலிக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.
பிரான்ஸ்
சுவிஸ் நாட்டவர்களுக்கு மிகவும் பிடித்தமான மற்றொரு சுற்றுலாத்தலம் பிரான்ஸ். பிரான்சுக்கு செல்லும் சுவிஸ் குடிமக்களுக்கு எவ்வித தடையும் கிடையாது, தனிமைப்படுத்தலும் கிடையாது.
ஆனாலும், நீங்கள் பிரான்ஸ் எல்லையிலிருந்து 30 கிலோமீற்றருக்கு அதிக தொலைவில் வசிப்பவர் அல்லது 24 மணிநேரத்துக்கு அதிகமாக பிரான்சில் இருக்க விரும்புகிறீர்கள் என்றால், உங்களுக்கு கொரோனா இல்லை என்பதைக் காட்டும் பி.சி.ஆர் சோதனை முடிவு மற்றும் உங்களுக்கு கொரோனா அறிகுறிகள் இல்லை, அத்துடன், கொரோனா தொற்றிய யாருடனும் நீங்கள் தொடர்பில் இல்லை என்பதை தெரிவிக்கும் சுய விளக்க ஆவணம் ஆகியவற்றை நீங்கள் உடன் வைத்திருக்கவேண்டும்.
ஜேர்மனி
ஜேர்மனிக்கு விமானப்பயணம் மேற்கொள்ளும் யாராக இருந்தாலும், பயணம் புறப்படுவதற்கு 48 மணி நேரத்திற்கு முன் பரிசோதனை செய்துகொண்டு, தங்களுக்கு கொரோனா இல்லை என காட்டும் ஆவணத்தை சமர்ப்பிக்கவேண்டும்.
அதிக அபாயம் கொண்ட பகுதிகளிலிருந்து வருவோருக்கு ஜேர்மனியில் தனிமைப்படுத்தல் உண்டு, என்றாலும், அந்த பட்டியலில் சுவிட்சர்லாந்து இல்லாததால் சுவிஸ் மக்களுக்கு தனிமைப்படுத்தல் இல்லை.
ஆஸ்திரியா
மே 19ஆம் திகதி, ஆஸ்திரியா, பெரும்பாலான ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கான தனிமைப்படுத்தலை நெகிழ்த்த உள்ளது, சுவிட்சர்லாந்து உட்பட. இருந்தாலும், மொத்த நாடுகளுக்கும் விலக்கு அளிக்கப்படுமா, அல்லது சுவிட்சர்லாந்து செய்வதுபோல, நாடுகளின் சில மாகாணங்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படுமா என்பது இப்போதைக்கு தெரியவில்லை.
இதில் கவனிக்கவேண்டிய இன்னொரு விடயம் என்னவென்றால், இந்த நாடுகளுக்குச் சென்றுவிட்டு சுவிட்சர்லாந்துக்கு திரும்பும்போது, சுவிட்சர்லாந்தின் சில பகுதிகளில் தனிமைப்படுத்துதல் உண்டு என்பதை கவனத்தில் கொள்வது நல்லது.
இன்னொரு விடயம், கோடையின்போது பல நாடுகள் தங்கள் கட்டுப்பாடுகளை நெகிழ்த்த
வாய்ப்புள்ளது என்பதால், சற்று பொறுத்திருந்து, அதை கவனித்து சுற்றுலா
செல்வதற்கான பயணச்சீட்டுகளை முன் பதிவு செய்தல் நலம்!