சசிகலா எப்போது டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்? தமிழகம் வருவது குறித்து வெளியான தகவல்
பெங்களூருவில் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் சிகிச்சை பெற்று வரும் சசிகலா எப்போது டிஸ்சார் செய்யப்படுவார் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
சொத்துகுவிப்பு வழக்கு காரணமாக நான்கு ஆண்டுகளாக பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டிருந்த சசிகலா, சிறை தண்டனை காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, கடந்த 27-ஆம் திகதி விடுதலை செய்யப்பட்டார்.
இருப்பினும் விடுதலைக்கு முன்பே அவரது உடல்நிலை சரியில்லாமல் போனதால், அவர் பெங்களூருவில் இருக்கும் விக்டோரியா அரசு மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் அவரது இரத்த அழுத்தம் திடீரென அதிகரித்தது.
இதனால் அவருக்கு இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் அவருக்கு சர்க்கரை பிரச்சினையும் கட்டுக்குள் வராமல் இருந்தது. இந்த நிலையில் அவரது ரத்த அழுத்தம், சர்க்கரை போன்ற அனைத்து பிரச்சினைகளும் கட்டுக்குள் வந்துள்ளன.
சசிகலாவின் உடல்நிலை இயல்பான நிலைக்கு திரும்பியுள்ளதாக விக்டோரியா மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது. அவரது உடல் உறுப்புகள் அனைத்தும் சீரான நிலையில் செயல்படுவதாகவும், தற்போது அவருக்கு கொரோனா பாதிப்புகள் இல்லை என்றும் அந்த மருத்துவமனை தெரிவித்துள்ளது.
இருப்பினும், கொரோனா வழிகாட்டுதல்படி அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இதுகுறித்து விக்டோரியா அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரி முதல்வர் ஜெயந்தி கூறுகையில், சசிகலாவின் உடல்நிலை சீராக உள்ளது. கர்நாடக சுகாதாரத்துறையின் வழிகாட்டுதல்படி, 10 நாட்கள் ஆனாலே கொரோனா பாதிப்புகள் இல்லை என்றால் நோயாளியை விடுவிக்க முடியும். கொரோனா பரிசோதனை செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
அவரை நாளை (அதாவது இன்று) டிஸ்சார்ஜ் செய்வது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை. இது குறித்து மருத்துவர்களுடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
சசிகலா தரப்பினர் அவருக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்று விரும்புவதாக சொல்லப்படுகிறது.
இதன் காரணமாக இன்று பரிசோதனைக்கான சளி மாதிரி சேகரிக்கப்பட்டால், அதன் முடிவு நாளை வரும். அதில் கொரோனா பாதிப்பு இல்லை என்று முடிவு வந்தால் நாளை மறுநாள் அதாவது திங்கட் கிழமை அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட வாய்ப்பு உள்ளதாகவும், வருகிற 5-ஆம் திகதி தமிழகத்திற்கு செல்வார் என்றும் தகவல் வெளியாகியுள்ளன.

