கனடாவில் Omicron அலை எப்போது முடிவுக்கு வரும்?: நிலவும் மாறுபட்ட கருத்துக்கள்
Omicron வகை கொரோனா வைரஸால் கனேடிய மருத்துவமனைகள் வரலாறு காணாத அளவுக்கு அழுத்தத்தை எதிர்கொண்டுள்ள நிலையில், இந்த Omicron அலை எப்போது முடிவுக்கு வரும் என்ற கேள்வி எல்லோர் மனதிலும் ஒலித்துக்கொண்டிருக்கிறது.
அந்தக் கேள்விக்கான பதில்களோ வெவ்வேறு விதமாக காணப்படுகின்றன.
Omicron வகை மரபணு மாற்றக் கொரோனா முதன்முதலில் கண்டறியப்பட்ட தென்னாப்பிரிக்காவில், டிசம்பர் பாதி வாக்கில் தொற்று அதிகரித்து, தற்போது குறையத் தொடங்கிவிட்டது. ஜிம்பாபே, நமீபியா போன்ற பிற தென்னாப்பிரிக்க நாடுகளிலும் அதே காலகட்டத்தில் தொற்று அதிகரித்து குறையத் தொடங்கியாயிற்று.
ஆக, தென்னாப்பிரிக்காவைப் பொருத்தவரை, விரைவில் Omicron அலை முடிவுக்கு வந்துவிடும் என்ற நம்பிக்கை உருவாகி வருகிறது.
ஆனால், கனடாவில் அதே காலகட்டதில் Omicron தொற்று அதிகரிக்கத் தொடங்கவில்லை. ஆகவே, ஜனவரியின் பாதியில் அல்லது இறுதியில் அது உச்சம் தொட்டு, பிப்ரவரியில் குறையலாம் என்ற ஒரு கருத்து உருவாகியுள்ளது.
இதற்கிடையில், மருத்துவத்துறை நிபுணர்களோ வேறு விதமான கருத்துக்களைக் கூறி வருகிறார்கள்.
ரொரன்றோ பல்கலை bioethicist துறை பேராசிரியரான Kerry Bowman என்பவர் கூறும்போது, இந்த வைரஸ் வேகமாக பலரைத் தொற்றுவதால், இது ஒரு விரைவான அலை போல் தோன்றுகிறது. ஆனால், நாம் மிக வித்தியாசமான மக்களைக் குறித்து பேசிக்கொண்டிருக்கிறோம். (அதாவது கனடா மற்றும் தென்னாப்பிரிக்க மக்கள்) ஆகவே, இந்த இரண்டு கூட்டத்தினரையும் ஒப்பிட்டு, தென்னாப்பிரிக்காவில் நடந்ததைப்போலவே கனடாவிலும் நடக்குமா என்று கூற எனக்கு தயக்கமாக உள்ளது என்கிறார்.
இதே கருத்தை மற்ற சில அறிவியலாலர்களும் ஆமோதிக்கிறார்கள்.
வேறு சிலரோ, Omicron அலை எப்போது முடிவுக்கு வரும் என்று இப்போதைக்குக் கூறுவது கடினம் என்கிறார்கள்.
அதாவது தென்னாப்பிரிக்காவில் Omicron அலை முடிவுக்கு வருவதாக தோன்றும் நிலையில், அதே நிலைமை கனடாவிலும் இருக்கும் என்று உறுதியாக கூற முடியாது என்கிறார்கள் அறிவியலாளர்கள்.