சசிகலா விடுதலையான பின்பு எங்கு தங்கவுள்ளார் தெரியுமா? தயாராகும் பங்களா! வெளியான முக்கிய தகவல்
சொத்துகுவிப்பு வழக்கு காரணமாக சிறையில் அடைக்கப்பட்டிருக்கும், சசிகலா விடுதலையான பின்பு எங்கு வசிக்கவுள்ளார் என்பது குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிரிழந்த பின்பு, அவர் வீட்டில் சசிகலா வசித்து வந்தார். ஜெயலலிதா உயிரிழந்த பின்பு, கட்சியையும், ஆட்சியையும் அவர் வழிநடத்த முடிவு செய்தார். ஆனால், அதற்குள் சொத்துகுவிப்பு வழக்கு விவகாரத்தில் சசிகலா சிறையில் அடைக்கப்பட்டார்.
நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து வந்த நிலையில், ஜெயலலிதா வசித்து வந்த பங்களா அரசுடைமை ஆனது. கட்சியை எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் இணைந்து வழி நடத்த ஆட்சி எடப்பாடி வசம் சென்றுள்ளது.
இதனால் அதிமுக-வில் இருந்து முற்றிலும் ஒதுக்கப்பட்டுள்ள சசிகலா, வெளியே வந்த பின்பு எங்கு தங்குவார் என்ற கேள்வி எழுந்து வருகிறது. ஏனெனில், அண்மையில் வருமான வரித்துறை சசிகலாவின் சொத்துக்களை முடக்கியது. அதில் போயஸ் கார்டனில் உருவாகி வந்த பங்களாவும் ஒன்று.
இதனால் அதன் கட்டுமானப் பணிகள் தடைபட்டன. முடக்கம் செய்யப்பட்ட சொத்துக்களை விற்கமுடியாது, வாங்க முடியாது. ஆனால் சட்ட ரீதியாக முடக்கத்தை நீக்கும் வரையில் அந்த சொத்துக்களை அனுபவித்து வரலாம் என வழக்கறிஞர்கள் கூறிய நிலையில் டிடிவி தினகரன் கட்டுமான பணிகளை முடுக்கிவிட்டார்.
தற்போது தயாராகியுள்ள இந்த பங்களாவுக்கு 25-ஆம் திகதி பால் காய்ச்சும் விழா நடைபெறவுள்ளதாக அமமுக வட்டாரத்தில் கூறப்படுகிறது. ஜனவரி 27-ஆம் திகதி விடுதலை உறுதியாகியுள்ள நிலையில் அவர் வெளியே வருவதற்கு பகல் பொழுதாகிவிடும், ஓசூர் வர இரவாகிவிடும் என சொல்லப்பட்டது.
ஆனால் விடுதலை செய்வதற்கான கோப்புகளை முன்கூட்டியே தயார் செய்துவைக்கவும், காலையில் 9.30 மணிக்கு சிறை அலுவலகம் திறக்கப்பட்டவுடன் அவர் விடுதலையாவார் என பெங்களூரிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால் சென்னைக்கு அன்றிரவே வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் நேராக ஜெயலலிதா நினைவிடத்துக்கு சென்று அஞ்சலி செலுத்திவிட்டு போயஸ் கார்டன் இல்லத்துக்கு செல்ல இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.