அணு ஆயுத சோதனை நடத்தியுள்ள 8 நாடுகள் - எத்தனை முறை நடைபெற்றுள்ளது?
இதுவரை எந்த நாடுகள் எத்தனை முறை அணு ஆயுத சோதனைகள் நடத்தியுள்ளன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
அணு ஆயுத சோதனை தொடங்கும் அமெரிக்கா
33 ஆண்டுகளுக்கு பின்னர், அமெரிக்கா அணு ஆயுத சோதனை நடத்த அமெரிக்க போர் துறைக்கு ஜனாதிபதி டிரம்ப் உத்தரவிட்டார்.
மேலும், ரஷ்யா, சீனா, வடகொரியா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் ரகசியமாக அணு ஆயுத சோதனை நடத்தி வருவதாக குற்றஞ்சாட்டினார்.

ஆனால், டிரம்ப்பின் இந்த குற்றச்சாட்டுகளை அந்த நாடுகள் மறுத்துள்ளன. அமெரிக்கா அணு ஆயுத சோதனையை தொடங்கினால், ரஷ்யாவும் அதற்கான முயற்சியில் இறங்க உள்ளது.
பாகிஸ்தான் அணு ஆயுத சோதனை நடத்துவதாக டிரம்ப் தெரிவித்த கருத்துக்கு பதிலளித்துள்ள இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், சட்டவிரோத அணுசக்தி நடவடிக்கைகள் பாகிஸ்தானின் வரலாற்றின் ஒரு பகுதி ஆகும் என விமர்சித்துள்ளார்.
அணு ஆயுத சோதனை நடத்திய 8 நாடுகள்

இதுவரை உலகில் 9 நாடுகள் அணு ஆயுதம் வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் இஸ்ரேல் மட்டும் தற்போது வரை அணு ஆயுதம் வைத்திருப்பதை வெளிப்படையாக அறிவிக்கவில்லை.
மற்ற 8 நாடுகளும், மொத்தமாக 2000 க்கும் மேற்பட்ட அணு ஆயுத சோதனைகளை மேற்கொண்டுள்ளது.
இதில், 80% க்கும் அதிகமான சோதனைகள் 1945 மற்றும் 1992 ஆம் ஆண்டுக்கு இடையில், பனிப்போரின் போது அமெரிக்கா மற்றும் சோவியத் யூனியனால் நடத்தப்பட்டன.
அணு ஆயுதத்தை சோதிக்கும் களத்தை தேர்வு செய்யும் போது, குறைந்த நில அதிர்வு செயல்பாடு, கதிரியக்க வாயு வெளியேறுவதைத் தடுக்க திடமான மற்றும் வறண்ட பாறைகள், மனித குடியிருப்புகள் இல்லாத பகுதி போன்றவை கருத்தில் கொள்ளப்படுகிறது.
அமெரிக்கா
உலகில் அதிக அணு ஆயுதங்களை வைத்துள்ள அமெரிக்காவே முதல் அணுகுண்டு சோதனையை மேற்கொண்டது.
நியூ மெக்ஸிகோவின் வைட் சாண்ட்ஸில் அமெரிக்கா தனது முதல் அணுகுண்டை சோதித்தது.

நெவாடா தேசிய பாதுகாப்பு சோதனை தளம், மார்ஷல் தீவுகளில் உள்ள பிகினி மற்றும் எனெவெடக் அட்டோல் ஆகியவை அமெரிக்காவின் சோதனை தளங்களாகும்.
1992 ஆம் ஆண்டுக்கு பின்னர் அமெரிக்கா எந்த சோதனையும் மேற்கொள்ளாததால் இந்த தளங்கள் மூடப்பட்டுள்ளது.
ரஷ்யா
ரஷ்யாவின் முக்கிய அணுசக்தி சோதனை தளம் தற்போது கஜகஸ்தானில் உள்ள செமிபாலடின்ஸ்க் ஆகும்.

1961 ஆம் ஆண்டில், சோவியத் யூனியன் உலகின் மிகப்பெரிய அணுகுண்டான 50 மெகாடன் ஜார் பாம்பாவை நோவயா ஜெம்லியா தீவில் சோதித்தது.
தற்போது அதே தீவில், புதிய சுரங்கப்பாதைகளை அமைத்து வருகிறது. மீண்டும் ரஷ்யா அணுசக்தி சோதனையை தொடங்க திட்டமிட்டால், இங்கு தனது ஆயுத சோதனையை மேற்கொள்ளும்.
சீனா
1964 ஆம் ஆண்டில், ஜின்ஜியாங்கின் லாப் நூரில் தனது முதல் அணு ஆயுதத்தை சோதித்தது . 1996 வரை அங்கு ஏராளமான அணு ஆயுத சோதனைகளை நடத்தியது. சுமார் 100,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ள இந்தப் பகுதி, அதன் தனிமைப்படுத்தல் மற்றும் பாழடைந்ததால் தேர்ந்தெடுக்கப்பட்டது.
பிரித்தானியா
பிரித்தானியா, ஆஸ்திரேலியாவில் உள்ள மவுண்ட் பெல்லோ தீவு, ஈமு ஃபீல்ட் மற்றும் மரலிங்காவில் தனது அணு ஆயுத சோதனைகளை நடத்தியுள்ளது. மேலும், அமெரிக்காவின் நெவாடா தளத்திலும் சோதித்துள்ளது.
தற்போது, பிரித்தானியாவின் அணு ஆயுதங்கள் அமெரிக்க வடிவமைப்புகளை அடிப்படையாகக் கொண்டதால், அவற்றின் சோதனையும் அமெரிக்காவைச் சார்ந்துள்ளது.
அமெரிக்காவின் ஒப்புதல் இல்லாமல்பிரித்தானியா தனது அணுகுண்டுகளைப் பயன்படுத்தவோ அல்லது வேறு எந்த நாட்டிலும் அவற்றை நிலைநிறுத்தவோ முடியாது என்று கூறப்படுகிறது.
பிரான்ஸ்
பிரான்ஸ் தனது வெளிநாட்டு காலனி நாடுகளில் அணு ஆயுதங்களை சோதித்துள்ளது. அல்ஜீரிய சஹாராவில் 200க்கும் மேற்பட்ட அணு ஆயுத சோதனைகளை நடத்தியது.
மேலும் 1996 ஆம் ஆண்டில், பாலினீசியாவின் முருரோவா அட்டோலில் 190க்கும் மேற்பட்ட அணு ஆயுத சோதனைகளை நடத்தியது.
இந்தியா
1974 ஆம் ஆண்டு ராஜஸ்தானின் பொக்ரானில் இந்தியா தனது முதல் அணு ஆயுத சோதனையை நடத்தியது.

அதைத் தொடர்ந்து 1998 ஆம் ஆண்டில் மேலும் 5 அணு ஆயுத சோதனைகளை நடத்தி, உலகின் 6வது அணு ஆயுத சக்தியாக தன்னை அறிவித்தது.
அதன் பின்னர், இந்தியா அணு ஆயுத சோதனை மேற்கொள்ள தன்னார்வ தடை விதித்துள்ளது.
பாகிஸ்தான்

1998 ஆம் ஆண்டில் பலுசிஸ்தானின் சாகாய் மலைகளில் "சாகாய்-I" மற்றும் "சாகாய்-II" என அழைக்கப்படும் 5 அணு ஆயுத சோதனைகளை பாகிஸ்தான் நடத்தி, உலகில் அணுகுண்டு வைத்திருக்கும் 7வது நாடாக உருவெடுத்தது.
வட கொரியா
வட கொரியா அதன் ஹெர்மிட் இராச்சியத்தின் தொலைதூர மலைப் பகுதியில் அமைந்துள்ள புங்யே-ரி அணு ஆயுத சோதனை தளத்தில், 2006 மற்றும் 2017 க்கு இடையில் 6 அணு ஆயுத சோதனைகளை நடத்தியது.

2017 ஆம் ஆண்டில் அணு ஆயுத சோதனையை நடத்திய உலகின் கடைசி நாடு வட கொரியா.
மே 2018 ஆம் ஆண்டில், வடகொரியா அதனை மூடுவதாக அறிவித்தது. சர்வதேச பத்திரிகையாளர்கள் கலந்து கொண்ட விழாவில் சுரங்கப்பாதைகள் அழிக்கப்பட்டன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |