2025 ஆம் ஆண்டில் இந்தியர்களை அதிகளவில் வெளியேற்றிய நாடு - அமெரிக்கா இல்லை
காலாவதியான விசா மற்றும் குற்ற வழக்குகளில் சிக்குதல் போன்ற காரணங்களுக்காக குடியேறிய மக்களை தங்கள் நாட்டில் இருந்து உலக நாடுகள் நாடு கடத்துவது உண்டு.
2025 ஆம் ஆண்டில் நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள்
அந்த வகையில், 2025 ஆம் ஆண்டில், 81 நாடுகளில் இருந்து 26,400 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மாநிலங்களவையில் தெரிவித்துள்ளது.

2025 ஆம் ஆண்டில், அதிகபட்சமாக சவுதி அரேபியாவில் இருந்து 11,000 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
இதற்கு அடுத்தபடியாக, அமெரிக்காவில் இருந்து 3,800 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர். அதில், வாஷிங்டன் டிசியில் இருந்து 3,414 பேரும், ஹஸ்டனில் இருந்து 234 பேரும் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
இதில், பஞ்சாப், ஹரியானா, குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர்கள் அதிகளவில் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக 1,591 இந்தியர்களை நாடு கடத்தி மியான்மர் 3வது இடத்திலும், 1485 இந்தியர்களை நாடு கடத்தி மலேசியா 4வது இடத்திலும், 1469 இந்தியர்களை நாடு கடத்தி ஐக்கிய அரபு அமீரகம் 5வது இடத்திலும் உள்ளது.
கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, இந்த ஆண்டில் அதிக அளவிலான இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டு உள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

செல்லுபடியாகும் அனுமதிகள் இல்லாமல் வேலை செய்தல், தொழிலாளர் விதிகளை மீறுதல், முதலாளிகளிடமிருந்து தப்பிச் செல்வது ஆகிய காரணங்களால் அரபு நாடுகளில் இருந்து இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
அதேவேளையில், மியான்மர் கம்போடியா போன்ற நாடுகளில் இருந்து, வேலைவாய்ப்பு என வரவழைக்கப்பட்டு, சைபர் குற்றவாளிகளாக்கப்பட்ட 1,591 இந்தியர்கள் இந்தியாவிற்கு திரும்பியுள்ளனர்.
மாணவர்கள் நாடு கடத்தப்பட்டதில், பிரித்தானியா முதலிடத்தில் உள்ளது. 2025 ஆம் ஆண்டில் 170 இந்திய மாணவர்களை நாடு கடத்தியுள்ளது.
அடுத்தபடியாக அவுஸ்திரேலியா 170 இந்திய மாணவர்களையும், ரஷ்யா 82 இந்திய மாணவர்களையும், அமெரிக்கா 45 இந்திய மாணவர்களையும் நாடு கடத்தியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |