முருகனுக்கு உகந்த நாள், வளர்பிறை பார்த்து மாநாட்டை நடத்த போகிறாரா விஜய்? கட்சியில் என்ன நடக்கிறது?
நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகத்தின் முதல் அரசியல் மாநாடு எந்த நாளில் நடத்த வேண்டும் என்று குழப்பம் ஏற்பட்டுள்ளது.
அரசியல் மாநாடு
நடிகர் விஜய் தமிழக வெற்றி கழக கட்சியை தொடங்கி தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். அவர் வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளார்.
அவர் மக்களுக்கு பல நலத்திட்ட உதவிகளை செய்தும், மாணவ மாணவியருக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கி சிறப்பித்தும் வருகிறார்.
இந்நிலையில், தனது கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கான வேலைகளை நடிகர் விஜய் செய்து வருவதாக கூறப்படுகிறது.
இதற்காக பிரம்மாண்டமான மாநாட்டை நடத்தவுள்ளார். அதற்குரிய வேலைகளையும் கட்சி நிர்வாகிகள் தீவிரமாக செய்து வருகின்றனர்.
அதன்படி, ஒரு மாநில மாநாடு, 4 மண்டல மாநாடு, மாவட்ட பொதுக் கூட்டங்களை நடிகர் விஜய் நடத்தவுள்ளதாக தெரிகிறது. அதோடு, மாநாட்டை முடித்து விட்டு 234 தொகுதிகளுக்கும் விஜய் நடைபயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருப்பதாகவும் தகவல் வந்துள்ளது.
இதில், தவெக மாநாட்டை பொறுத்தவரை மதுரை, திருச்சி, சேலத்தில் நடத்தவிருப்பதாக கூறப்பட்டது. கடைசியில், விக்கிரவாண்டியில் மாநாடு நடத்த இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மேலும், அரசியல் மாநாடு வரும் செப்டம்பர் 22 -ம் திகதி நடைபெறவிருப்பதாகவும் கூறப்படுகிறது.
கட்சியில் குழப்பம்
செப்டம்பர் மாதம் மழை பெய்யும் என்பதால் ஜனவரி மாதத்தில் கட்சி மாநாட்டை நடத்தலாம் என்று கட்சியில் உள்ள முக்கிய நிர்வாகிகள் கூறியதாக சொல்லப்படுகிறது.
ஆனால், கோட் படம் வந்தவுடனயே கட்சி மாநாட்டை நடத்தி முடிக்க வேண்டும் என்று விஜய் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், வரும் செப்டம்பர் 22 -ம் திகதியே நடத்தப்படும் என்கிறார்கள்.
அதுமட்டுமல்லாமல், அந்த திகதியில் முருகனுக்கு உகந்த கார்த்திகை நட்சத்திரம் வருவதால் அன்றே நடத்த வேண்டும் என்று கூறுகிறார்கள். ஆன்மீகத்தில் விஜய்க்கு ஆர்வம் இருப்பதால் அந்த நாளில் நடத்த சம்மதம் தெரிவித்துள்ளார்.
ஆனால், சில நிர்வாகிகள் அந்த நாளில் நடத்த வேண்டாம் என்கிறார்கள். அதாவது செப்டம்பர் 22 -ம் திகதி தேய்பிறை என்பதால் வளர்பிறை வரும் நாளில் மாநாட்டை நடத்த வேண்டும் என கூறுகிறார்கள்.
இதனிடையே அந்த நாளில் மாலை 4.31 முதல் 6.01 வரை ராகு காலம் என்பதால் அதற்கு முன்னரே மாநாட்டை தொடங்கி, 8 அல்லது 9 மணிக்கு மாநாட்டை முடிக்கும் திட்டமும் உள்ளதாம். இந்த மாதிரியான சிக்கல்கள் விஜயின் கட்சிக்குள் நிலவி வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |