பிரான்ஸ் ஜனாதிபதிக்கு பெரும் சாதகமாக அமைந்துள்ள உக்ரைன் போர்
உக்ரைன் போர் உலக நாடுகள் மீது பலவகையில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
கச்சா எண்ணெய், எரிவாயு விலை உயர்வு முதல், உணவுப்பொருட்கள் தட்டுப்பாடு வரை, பல விடயங்கள் மீது உக்ரைன் போர் ஏற்படுத்தியுள்ள தாக்கம் கவலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், பிரான்சில் அது வேறுவகையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆம், ஏப்ரல் மாதம் 24ஆம் திகதி பிரான்சில் ஜனாதிபதி தேர்தலில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், உக்ரைன் போர் தொடர்பில் பிரான்ஸ் ஜனாதிபதியான இமானுவல் மேக்ரான் எடுத்த சில நடவடிக்கைகள் அவருக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்துள்ளன, அந்த நல்ல பெயர் அவருக்கு தேர்தலில் வெற்றியையும் பெற்றுத்தரப்போகிறது என உறுதியாகக் கூறுகிறார்கள் அரசியல் நிபுணர்கள்.
இரண்டு விடயங்கள் அவரது வெற்றிக்கு சாதகமாக அமைந்துள்ளன...
ஒன்று, பிரான்சில் ஜனாதிபதி பதவிக்குப் போட்டியிடும் மற்ற வேட்பாளர்களின் உறுதியற்ற தன்மை.
இரண்டு, சர்வதேச சூழல்...
உக்ரைன் போர் பரபரப்பானபோது, பிரான்ஸ் ஊடகங்கள் ஜனாதிபதி தேர்தலைக் குறித்து பேசுவதை விட்டுவிட்டு, போர் மீது கவனம் செலுத்தத் துவங்கின.
சர்வதேச மேடையில் கவனம் ஈர்க்கும் வகையில் உலாவரத் தொடங்கினார் மேக்ரான். அவர் புடினுடன் பேச்சு வார்த்தைகள் நடத்தியதை பல நாட்டு ஊடகங்கள் கேலி செய்தன. ஆனால், பிரான்ஸ் மக்கள் அதை வேறுவிதமாகப் பார்த்தார்கள். தங்கள் ஜனாதிபதி உலக அமைதிக்காக மற்றவர்களை விட ஒரு அடி முன்னே எடுத்து வைத்து முயற்சி செய்வதாக அவர்கள் அவரைப் பார்த்தார்கள்.
போர் என்றாலே அஞ்சாதவர்கள் குறைவு. அப்படியிருக்கும்போது, தங்களில் ஒரு பகுதியான ஐரோப்பாவில் போர் வந்ததும் பிரெஞ்சு மக்களும் பயப்படத்தான் செய்தார்கள். நாட்டு மக்களுக்கு பயம் வந்தால் என்ன செய்வார்கள்? தலைவரிடம் செல்வார்கள்!
அதற்கேற்றாற்பொல், அவர்கள் தலைவரும் புடினை நேருக்கு நேராக சந்தித்து போரை நிறுத்தக் கோரும்போது, அவரை அவர்கள் மரியாதையுடன்தானே பார்ப்பார்கள். மேலும், இப்போது மேக்ரான்தான் ஐரோப்பிய கவுன்சிலின் தலைவர்.
ஆக, மொத்தத்தில் மேக்ரான் மீதான அந்த மரியாதை தேர்தலில் எதிரொலிக்கப்போகிறது என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.