உலக பாதுகாப்பு குறியீடு 2025: அமெரிக்கா, இங்கிலாந்தை விட பாதுகாப்பான நாடு எது தெரியுமா?
சமீபத்தில் வெளியிடப்பட்ட 2025 Numbeo பாதுகாப்பு குறியீடு, உலகின் பாதுகாப்பான நாடுகள் குறித்த நீண்ட கால நம்பிக்கைகளை மாற்றியமைத்து சில ஆச்சரியமான முடிவுகளை வெளியிட்டுள்ளது.
இந்த ஆண்டு குறியீட்டின்படி, ஆசியாவின் மிகவும் பாதுகாப்பான நாடாக சீனா உருவெடுத்துள்ளது
மேலும், பாரம்பரியமாக பாதுகாப்பான நாடுகளாகக் கருதப்படும் இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா போன்ற பல மேற்கத்திய நாடுகளைவிட இந்தியா சிறப்பாக செயல்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
ஆசியாவில் சீனா முதலிடம்
சீனா 76.0 பாதுகாப்பு மதிப்பெண்ணுடன் உலகளவில் 15-வது இடத்தைப் பிடித்து, பிராந்திய மற்றும் சர்வதேச நாடுகளைவிட முன்னணியில் உள்ளது.
உலகெங்கிலும் உள்ள பயனர்களிடமிருந்து பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில் உருவாக்கப்படும் இந்த குறியீடு, குற்ற விகிதங்கள், பொதுமக்களின் பாதுகாப்பு பற்றிய கருத்து மற்றும் சட்ட அமலாக்கத்தின் மீதான நம்பிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் நாடுகளை மதிப்பிடுகிறது.
மேற்கத்திய நாடுகளை முந்திய இந்தியா
இந்தப் பட்டியலில் இந்தியா சற்று கீழே இருந்தாலும், அதன் செயல்திறன் குறிப்பிடத்தக்கது.
147 நாடுகளில் 55.7 மதிப்பெண்களுடன் 66-வது இடத்தை இந்தியா பிடித்துள்ளது, இங்கிலாந்து (87-வது, 51.7 புள்ளிகள்) மற்றும் அமெரிக்கா (89-வது, 50.8 புள்ளிகள்) ஆகிய இரு நாடுகளையும் முந்தியுள்ளது.
இந்த இரண்டு நாடுகளும் பொதுவாக பாதுகாப்பான, வளர்ந்த ஜனநாயக நாடுகளாகக் கருதப்படுவது குறிப்பிடத்தக்கது.
அண்டை நாடுகள் மற்றும் உலகத் தலைவர்கள்
இந்தியாவின் தெற்காசிய அண்டை நாடுகளில், இலங்கை 59-வது இடத்தைப் பிடித்துள்ளது (மதிப்பெண்: 57.9). பாகிஸ்தான் 65-வது இடத்தையும் (மதிப்பெண்: 56.3), வங்கதேசம் 126-வது இடத்தையும் (மதிப்பெண்: 38.4) பிடித்துள்ளன.
இந்த ஆண்டு உலகளாவிய தரவரிசையில், ஐரோப்பிய நாடான அன்டோரா 84.7 மதிப்பெண்ணுடன் "2025-ஆம் ஆண்டின் உலகின் பாதுகாப்பான நாடு" என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினுக்கு இடையே பைரனீஸ் மலைகளில் அமைந்துள்ள அன்டோரா, அதன் குறைந்த குற்ற விகிதங்கள் மற்றும் வலுவான பொது பாதுகாப்பு உணர்விற்காக அதிக மதிப்பெண்களைப் பெற்றுள்ளது.
முதல் இடங்களில் மத்திய கிழக்கு நாடுகள்
ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கத்தார் மற்றும் ஓமன் ஆகிய மூன்று மத்திய கிழக்கு நாடுகளும் வலுவான இடங்களைப் பிடித்துள்ளன.
நன்கு வளர்ந்த பாதுகாப்பு உள்கட்டமைப்புகள் மற்றும் குறைந்த அளவிலான குற்றங்களால், இந்த மூன்று நாடுகளும் உலகளவில் முதல் ஐந்து இடங்களுக்குள் வந்துள்ளன.
2025 Numbeo பாதுகாப்பு குறியீட்டில் முதல் 10 இடங்களைப் பிடித்த நாடுகள்:
- அன்டோரா - 84.7,
- ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) - 84.5,
- கத்தார் - 84.2,
- தைவான் - 82.9,
- ஓமன் - 81.7,
- ஐல் ஆஃப் மேன் (பிரித்தானிய ராஜ்ஜியத்தை சார்ந்தது) - 79.0
- ஹாங்காங் (சீனா) - 78.5
- ஆர்மீனியா - 77.9
- சிங்கப்பூர் - 77.4
- ஜப்பான் - 77.1
பாதுகாப்பற்ற நாடுகள்
தரவரிசையின் மறுமுனையில், வெனிசுலா 19.3 என்ற மிகக் குறைந்த பாதுகாப்பு மதிப்பெண்ணுடன் மிகவும் பாதுகாப்பற்ற நாடாக இடம்பிடித்துள்ளது.
மோதல்கள், அரசியல் குழப்பங்கள் மற்றும் அதிக குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தான், சிரியா மற்றும் ஹைட்டி போன்ற பிற நாடுகளும் கடைசி இடங்களிலேயே உள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |