ஈரான் உச்ச தலைவர் இறுதிச் சடங்கு: பங்கேற்க குவியும் உலகத் தலைவர்கள் யார் யார்?
மறைந்த ஈரானின் உச்ச தலைவர் காமேனியின் இறுதிச் சடங்கில் பங்கேற்க பல்வேறு நாடுகளின் தலைவர்களும், பிரதிநிதிகளும் தெஹ்ரானில் குவிந்துள்ளனர்.
காமேனியின் இறுதி அஞ்சலி
கடந்த பிப்ரவரி 28ம் திகதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகள் இணைந்து நடத்திய தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா காமேனி கொல்லப்பட்டார்.
கடந்த 4 மாதங்களாக நிலவி வந்த போர் பதற்றம் காரணமாக இறுதிச் சடங்கு தள்ளி வைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இருதரப்பிற்கும் இடையிலான தீவிரமான பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது.

இதையடுத்து ஈரானின் உச்ச தலைவர் காமேனியின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக தெஹ்ரானில் உள்ள கிராண்ட் மொசல்லாவில் வைக்கப்பட்டுள்ளது.
மேலும் ஒரு வாரம் அரசு முறை இறுதிச் சடங்குகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அஞ்சலி செலுத்தும் உலக தலைவர்கள்
இந்நிலையில் ஈரானின் அரசு செய்தி நிறுவனமான IRIB வழங்கிய தகவலின் படி, உச்ச தலைவர் காமேனியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த பல்வேறு நாடுகளின் தலைவர்களும் 100 க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகளும் இறுதிச் சடங்கில் பங்கேற்க உள்ளதாக தெரியவந்துள்ளது.

காமேனியின் உடலுக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப், தஜிகிஸ்தான் ஜனாதிபதி இமோமாலி ரஹ்மான், ஆர்மீனியா பிரதமர் நிகோல் பாஷினியன், ஜார்ஜியா ஜனாதிபதி மிகைல் கவெலாஷ்விலி ஆகியோர் அஞ்சலி செலுத்த உள்ளனர்.
மேலும் துருக்கியின் துணை ஜனாதிபதி செவ்டெட் யில்மாஸ், இந்தியாவில் இருந்து பீகார் ஆளுநர் சையத் அதா ஹஸ்னைன், ரஷ்ய பாதுகாப்பு கவுன்சில் துணைத் தலைவர் மற்றும் முன்னாள் ஜனாதிபதி டிமிட்ரி மெத்வதேவ், சீனாவின் தேசிய மக்கள் காங்கிரஸ் நிலை குழுவின் துணைத் தலைவர் ஹே வெய், ஆப்கானிஸ்தானின் வெளியுறவுத்துறை அமைச்சர் அமீர் கான் மற்றும் வங்கதேசம் நாடாளுமன்ற சபாநாயகர் ஹபீஸ் உத்தின் அகமது ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |