சீமான் போட்டியிடும் திருவொற்றியூர் தொகுதியில்... இதுவரை எந்த கட்சி அதிக முறை வென்றுள்ளது? இந்த முறை யார்?
சென்னை திருவொற்றியூர் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடுவதால், இந்த தொகுதி நட்சத்திர வேட்பாளர் தொகுதியாக மாறியுள்ள நிலையில், இந்த திருவொற்றியூர் தொகுதி கடந்த தேர்தல்களில் எப்படி இருக்கிறது என்பதை பார்ப்போம்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னையில் இருக்கும் திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.
இவர் முதலில் ஸ்டாலின் எந்த தொகுதியில் போட்டியிடுகிறாரோ, அங்கு போட்டிடுவேன் என்று கூறியிருந்தார்.
அதன் பின், இப்போது திருவொற்றியூரில் போட்டியிடுகிறார். இதற்கான காரணத்தையும் அவர் கூறியிருக்கிறார்.
இந்நிலையில், சீமான் போட்டியிடும் இந்த தொகுதியில், அதிமுக சார்பில் கே.குப்பன், திமுக சார்பில் கே.பி.பி.சங்கர், மக்கள் நீதி மய்யம் சார்பாக டி.மோகன், அமமுக சார்பாக சவுந்திரபாண்டியன் என மொத்தம் 22 வேட்பாளர்கள் களம் கண்டுள்ளனர்.
திருவொற்றியூர் தொகுதி கடந்த 1977-ம் ஆண்டில் இருந்து இதுவரை 12 தேர்தல்களை சந்தித்துள்ளது.
6 முறை திமுக, அதிமுக 4 முறை, காங்கிரஸ் 1 முறை மற்றும் காந்தி காமராஜ் காங்கிரஸ் ஒரு முறை வெற்றி பெற்றுள்ளன.
திருவொற்றியூர் தொகுதியில் இந்த முறை போட்டியிடும் சீமான் கடந்த முறை கடலூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டார்.
அங்கு 12,497 வாக்குகளை அவர் பெற்றார். இதே கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில், திருவொற்றியூரில் 15, 748 வாக்குகளை நாம் தமிழர் கட்சி பெற்றது.
இது போன்ற நிலையில் தான் சீமான் இந்த முறை திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடுகிறார். அதே சமயம் இங்கு அதிமுக சார்பில் போட்டியிடும் குப்பன், 1991 மற்றும் 2011 தேர்தல்களில் போட்டியிட்டு வென்று, தற்போது 3 ஆவது முறையாக இந்த தொகுதியில் போட்டியிடுகிறார்.
திமுகவை பொறுத்தவரை கடந்த 2016 தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது. அமமுக வேட்பாளர் சவுந்திரபாண்டியன், 2014 நாடாளுமன்றத் தேர்தலில் வடசென்னை தொகுதியில் தேமுதிக சார்பில் போட்டியிட்டார். தற்போது சட்டமன்றத் தேர்தலில் திருவொற்றியூரில் களம்காண்கிறார்.
திமுகவை பொறுத்தவரை கடந்த 2016 தேர்தலில் இத்தொகுதியில் வெற்றி பெற்ற கே.பி.பி.சாமியின் சகோதரர் கே.பி.பி. சங்கர் நிறுத்தப்பட்டுள்ளார்.
சென்னை மாமன்ற உறுப்பினராக இருந்த அனுபவம் உள்ள இவர், முதன்முறையாக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுகிறார்.
அமமுக வேட்பாளர் சவுந்திரபாண்டியன், கடந்த 2014-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் வடசென்னை தொகுதியில் தேமுதிக சார்பில் போட்டியிட்டார். தற்போது சட்டமன்றத் தேர்தலில் திருவொற்றியூரில் களம்காண்கிறார்.
மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் மோகன், அக்கட்சியின் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளராக இருக்கிறார். அக்கட்சியின் சார்பில் முதன்முறையான தேர்தல் களம் காண்கிறார்.
திருவொற்றியூர் தொகுதியை பொறுத்தவரை, இங்கு மீனவர்கள் மற்றும் தொழிலாளர்கள் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

